மாயையும், உடல் மெய்யாகிய மூலப் பகுதி என்ற மாயத்தையும், உணர்த்து மெய்யாகிய தூமாயை மாமாயை ஆதலால் அம் மாமாயையையும், வனப்பாற்றலாகிய பரைத்தொகுதியையும், கடந்து, மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனாகிய அழிவில்லாத முழுமுதல் விழுப்பொருள் சிவன். அச் சிவனை அவனருளால் அவன் தாளுணர்த்த முழுதும் விளக்கியிட்டேன். இதன்கண் விளக்கப்பட்ட பொருள் எட்டு. அவை முறையே அறியப்படும் பொருள், அறிவு, அறிவோன், உடல் மெய், உணர்வு மெய், உணர்த்து மெய், வனப்பாற்றல், சிவன் என்ப. அறியப்படும் பொருள் நிலையிலாப் பொருள் நிலைப்பொருள் என இருவகைய. அவற்றுள் நிலையிலாப் பொருள் சுட்டுணர்வால் காணப்படும் உலகு உடல் முதலியன. நிலைப்பொருள் சுட்டுணர்வாலும் சிற்றுணர்வாலும் காணவொண்ணாத ஆனால் முற்றுணர்வால் காணவொண்ணும் இறை அருள் உயிர் முதலியன. அறிவு சுட்டறிவு, சிற்றறிவு, முற்றறிவு என மூவகைப்படும். சுட்டறிவு என்பது உயிர் மாயாகாரிய அகப்புறக் கருவிகளைத் துணைக்கொண்டு மாயாகாரியப் பொருள்களை யுணர்தல். சிற்றறிவென்பது இக்கருவிகளைக் கொண்டு உணரும் நான் இக்கருவிகளுக்கு வேறான அறிவுப்பொருள் என்று உள்நின்று அருள் உணர்த்த உணர்தல். முற்றறிவென்பது சிவபெருமான் சிவகுருவாய் எழுந்தருளி வந்து சிவமாக்கி ஆட்கொண்டதும் திருவருளே கருவியாய்த் திருவடியை உணர்தல். அறிவோன் என்பது என்றும் அடிமையாய்ச் சார்ந்ததன் தன்மையாய் நின்று பயன்துய்க்கும் ஆருயிராகும். உடல்மெய்: இருபத்துநான்கு தத்துவங்களைக் கொண்டது. உணர்வுமெய்: ஏழு தத்துவங்களைக் கொண்டது. உணர்த்துமெய்: ஐந்து தத்துவங்களைக் கொண்டது. வனப்பாற்றல்: திருவருளாகிய உண்மை இயற்கைப் பேரறிவுப் பெரும்பொருள். சிவன்: அத் திருவருளை உடைய திருவடிப் பேரின்பத்தை ஆருயிர்க்குக் காட்டிக் கண்டு ஊட்டிவரும் ஒப்பில்லாத விழுமிய முழுமுதலாம் உண்மை அறிவு இன்ப எழிலுருவினன். தன்னில் வரும்பரை, சிவத்தினின்றும் பிரியாது தோன்றும் திருவருள். வீதல் - மலர்தல்; அழியாதிருத்தல். (அ. சி.) ஞேயம் - அறியப்படுபொருள். ஞானம் - அறிவு. ஞாதுரு - அறிபவன். பரை ஆயம் - சத்திகள் கூட்டம். வீயம் - பிறப்பிறல்லாச் சிவம். (20) 155. விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து வளப்பில் கயிலை1 வழியில்வந் தேனே. (ப. இ.) மேலோதியவற்றை விளக்கியருளியவன் மேலாகிய மெய்யுணர்வுப் பேரொளி. அவன் அளவில்லாத பெருமையையுடையவன். இன்பவடிவினனாகிய நந்தி. ஆருயிர்களை நடுங்கச் செய்யும் ஆணவ வல்லிருளை அவ்வுயிர்களாலேயே அடக்கும் அருட்பெருங் கூத்தன். அவன் செவியறிவுறுத்திய திருவைந்தெழுத்தினைச் சிறப்புற உணர்வில் பதித்து, அவன் திருவாணைவழி வளப்பம் மிக்க திருக்கயிலைமலையின்கணுள்ள நந்தி மரபில்யான் வந்தேன்.
1. மாதவம் செய். 12. திருமலைச் சிறப்பு. 25.
|