(அ. சி.) சொற்போந்து - உபதேசம் பெற்று. கயிலைவழி - நந்தி பரம்பரை. (21) 156. நந்திஅரு ளாலே மூலனை நாடிப்பின் நந்திஅரு ளாலே சதாசிவ னாயினேன் நந்திஅரு ளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன் நந்திஅரு ளாலே நானிருந் தேனே. (ப. இ.) நந்தியாகிய சிவபெருமான் திருவருளால் மூலன் உடம்பினுட் புகுந்தேன். பின்னும் அந் நந்தியருளாலேயே (149) 'சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேத' மாகலின் இத் தமிழாகமத்தை ஓதினேன். என்னை? அருளோனாகிய சதாசிவ மெய்யினின்றும் நூல் வருதல் வாய்மையாகலினென்க. தமிழாகமம் ஓதுதலே சதாசிவனாதல். அவனருளாலேயே திருவடிப் பேற்றின்பமாகிய அம்மையினை இம்மையே பெற்றுள்ளேன். அந் நந்தியெங்கடவுள் திருவருளானே இவ் வுலகத் திருந்துள்ளேன். மூலன் - முதற் கடவுள் எனலுமாம். (அ. சி.) நந்தி . . . பின் - நந்தி யெம்பெருமான் திருவருளியக்க மூலனுடைய தேகத்தில் புக்குப் பின். (22) பாயிரம் முற்றும்.
|