முதல் தந்திரம் [காரணாகமம்] 1. உபதேசம்
157. விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து உண்ணின் றுருக்கயொ ரொப்பிலா ஆனந்தக் கண்ணின்று காட்டிக் களிம்பறுத்1 தானே. (ப. இ.) ஆருயிர்களை ஆட்கொள்ள வேண்டிய அருள்வினைக் கீடாக சிவவுலகத்தினின்றும் நிலவுலகம் போந்து சிவகுருவாய்த் தோன்றியருளினன். மிகவும் குளிர்ச்சி பொருந்திய திருவடியைத் தொன்மை நன்மைக் காவலாய் முன்னமே அமைத்தருளினன். அவனே உள் நின்று நெகிழச்செய்து ஒப்பில்லாத பேரின்பக் கண்ணாகிய அகக்கண்ணைக் காட்டியருளிப் பழமலமாகிய களிம்பினை யறுத்தருளினன். களிம்பு, என்பது பெரும்பாலும் தூய வாய பொருள்களைத் தான் சார்ந்தமையான் தீயவாக்கும் நோயாகிய பகைப்பொருள். இது நாயனாரருளிய 'பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால், கலந்தீமை யால்திரிந்தற்று.' என்னும் செந்தமிழ்ப் பொதுமறையான் உணரலாம். (அ. சி.) தலைக்காவல் - சிறந்த காவல். களிம்பு - ஆணவமலம். (1) 158. களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி களிம்பறுத் தான்அருட் கண்விழிப் பித்துக் களிம்பணு காத கதிரொளி2 காட்டிப் பனிங்கிற் பவழம்3 பதித்தான் பதியே. (ப. இ.) எல்லாரினும் உயர்ந்த முழுமுதலாகக் கருதப்படுவான் நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான். அவனே நந்தியங் கடவுள் என்று அழைக்கப் பெறுவான். அவன் ஆருயிர்களை அருளால் நன்னெறிப்படுத்தி இருவினையொப்பு, மலச்செவ்வி, திருவருள்வீழ்ச்சி வருவித்து களிம்பறுத் தருளினன். அகக் கண்ணாகிய அருட் கண்ணைத் திறப்பித்தருளினன். களிம்பாகிய மலம் எஞ்ஞான்றும் அணுக ஒண்ணாத இயற்கை உண்மை அறிவின்பப் பேரொளி சிவன். அவன் தன் திருவடியின் ஒளிக்கதிர் காட்டிச் சார்ந்ததன் வண்ணமாம் தன்மை வாய்ந்த பளிங்கினையொத்த ஆவியின்மாட்டு பவழம்போன்ற செம்மைத்தாகிய தன் திருவடியினைப் பதித்தருளினன். அவனே இறையாகிய சிவபெருமான். பவழம் - செம்மணியாகிய சிவன். (அ. சி.) களிம் . . . விழிப்பித்து - அன்பு முதிர்ச்சியினால் அருளை வளரச்செய்து ஆணவமலத்தை ஒழித்தான். (2)
1. நெல்லிற். சிவஞானபோதம், 2. 2 - 3. 2. ஒளிக்கு. கொடிக்கவி, 1. 3. வந்தெனுடல். தாயுமானவர், ஆகார, 18.
|