பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை1096

பரமதத்தன் அக்கனியைத் தன் கையில் வாங்கினான். வாங்கிய அளவில் அக்கனி மாயமாய் மறைந்தது. அதனைக் கண்டு அஞ்சிய பரமதத்தன் தன் மனைவியாக வந்த அம்மையாரைத் தெய்வமென மதித்து அவரோடு சேர்ந்து வாழ்ந்தபோதும் உறவுத்தொடர்பு இன்றி ஒழுகி வந்தான்.

மறுமணம்

இவ்வாறு ஒழுகும் நாளில் ஒருநாள் கடல் கடந்து வாணிபம் செய்து மீள்வேன் என உறவினர்களிடம் கூறி அரிய பல பொருள்களை மரக்கலத்தில் ஏற்றிக் கொண்டு கடல் கடந்து சென்று பெரும் பொருள் ஈட்டிக் கொண்டு மீண்டவன் பாண்டி நாட்டு மதுரையை அடைந்து அங்கே இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் புரிந்து வாழ்ந்து வந்தான். அம்மனைவிக்குப் பிறந்த பெண் குழந்தைக்குத் தான் தெய்வமென மதிக்கும் புனிதவதியாரின் பெயரைச்சூட்டி மகிழ்ந்துறைந்தான்.

புனிதவதியார் சந்திப்பு

இதனை அறிந்த புனிதவதியாரின் சுற்றத்தினர் அம்மையாரை அவர் தம் கணவர்பால் சேர்ப்பிக்கும் கருத்துடன் அவரைப் பல்லக்கில் ஏற்றிக்கொண்டு பாண்டி நாடடைந்து அவன் வாழும் ஊர் எல்லையை அணுகினார்கள். அவர்கள் வருகையை அறிந்த பரமதத்தன், அச்சம் உடையவனாய், இரண்டாவதாகத் தான் மணந்த மனைவியோடும் மகளோடும் புறப்பட்டு ஊர் எல்லையை அடைந்தான். அவன் வருகையை அறிந்த உறவினர் பல்லக்கை நிறுத்தினர். பரமதத்தன் அம்மையாரிடம் 'அடியேன் உம்அருளால் வாழ்கிறேன். இவ்விளங்குழவிக்கு உமது பெயரையே சூட்டியுள்ளேன்' என்று கூறி அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். அதனைக் கண்ட புனிதவதியார் அச்சத்தோடு சுற்றத்தார் பால் ஒதுங்கி நின்றார். சுற்றத்தினர் பரமதத்தனை நோக்கி 'நீ உன் மனைவியை வணங்கக் காரணம் யாது' எனக் கேட்க அவன் அவர்களை நோக்கி 'இவர் நம் போன்றவர் அல்லர் தெய்வத்தன்மை வாய்ந்தவர் நீவிரும் இவரை வழிபடுவீராக' என்றான்.

பேய் வடிவம்

சுற்றத்தவர் 'ஈதென்ன வியப்பு' எனத் திகைத்து நிற்கப் புனிதவதியார் சிவபிரான் திருவடிகளைச் சிந்தித்து 'என்