பக்கம் எண் :

1097பதினொன்றாந் திருமுறை

கணவர் கொள்கை இதுவாயின் அவர் பொருட்டு அமைந்த எனது தசைப்பொதியைக் கழித்து நீக்கி நின் திருவடிகளைப் போற்றி நிற்கும் கணங்களில் ஒன்றாகும் பேய் வடிவினை எனக்குத் தந்தருளுக' என வேண்டி நின்றார். அந்நிலையில் பெருமான் அருளால் வானுலகும் மண்ணுலகும் போற்றும் பேய் வடிவம் அவருக்கு வாய்த்தது. சுற்றத்தவர் அஞ்சி அகன்றனர். புனிதவதியார் சிவனடியே சிந்திக்கும் சிவஞானம் உடையவராய் அற்புதத் திருஅந்தாதியால் இறைவனைப் போற்றினார். இதனைச் சேக்கிழார்,

ஈங்கிவன் குறித்த கொள்கை இது இனி

இவனுக்காகத்

தாங்கிய வனப்புநின்ற தசைப்பொதி கழித்து

இங்கு உன்பால்

ஆங்குநின் தாள்கள் போற்றும்

பேய்வடிவு அடியேனுக்குப்

பாங்குற வேண்டும் என்று பரமர்தாள்

பரவி நின்றார்

ஆனஅப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே
மேல்நெறி உணர்வுகூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில்
ஊனுடை வனப்பை எல்லாம் உதறிஎற் புடம்பேயாக
வானமும் மண்ணும் எல்லாம் வணங்குபேய் வடிவம் ஆனார்

எனத் தெரிவித்தருள்கிறார். அம்மையாரும் தாம் அருளிய அந்தாதியில்

பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கீது
உறினும் உறாதொழியுமேனும் - சிறிதுணர்த்தி
மற்றொரு கண் நெற்றிமேல் வைத்தான் பேயாய
நற்கணத்தில் ஒன்றாய நாம்

எனக் குறித்தருள்கிறார். இதனால் பேய் வடிவம் என்பது சிவகணங்கில் ஒன்றான பேய்வடிவம் என்பதை அறியலாம்.

அம்மையே வருக

பின்பு திருஇரட்டை மணிமாலை என்ற சிறு பிரபந்தத்தையும் அருளி இறைவனைப் போற்றித் திருக் கயிலையில் சிவபிரானது திருவோலக்கத்தைக் காணும் பெரு விருப்புடன் வடதிசை நோக்கிப் புறப்பட்டு, திருக் கயிலைமால்வரையை அடைந்தார். சிவபிரான் எழுந் தருளிய இம்மலையைக் காலால் மிதித்தல் கூடாது எனக் கருதியவராய்