தலையால் நடந்து மேல்ஏறிச் சென்று இறைவன் சந்நிதியை அடைந்தார். இறைவனது திருவருள் நோக்கம் அம்மையார் மேற் பதிந்தது. சிவபோகத்தைத் தன் அடியவர்க்கருளும் அருட்சத்தியாகிய அம்பிகை அம்மையாரின் அன்பின் திறங் கண்டு வியந்து இறைவனை நோக்கி 'எம் பெருமானே? தலையினால் நம்மை நோக்கி நடந்துவரும் இப்பெண் யார்?' என வினவ பெருமான் 'இவர் அன்பினால் நம்மைப் பேணும் அம்மையாவாள். பேய் வடிவம் நம்மை வேண்டிப் பெற்றனள்' எனக்கூறி 'அம்மையே' என்னும் செம்மொழியால் அவரை அழைத்தருள 'அப்பா' என்று சொல்லிக் கொண்டு இறைவனையும் இறைவியையும் வணங்கினார். இறைவன் அவரை நோக்கி 'நீ நம்பால் பெறக் கருதுவது யாது?' எனக் கேட்க அம்மையார் இறைவா நீ திருநடம் புரியும்போது உன் அடி நிழற்கீழ் இருக்க வேண்டுமென வேண்டினார். பெருமான் 'தென்னாட்டில் திருவாலங்காட்டில் யாம் ஆடி அருளும் திருக்கூத்தினைக் கண்டு எம்மைப் பாடிப் போற்றி இன்புற்றிருப்பாயாக' என அருளினார். திருவடிப்பேறு அம்மையார் கயிலைப் பெருமானிடம் விடைபெற்று தலையால் நடந்தே திருவாலங்காட்டினை அடைந்து அண்டமுற நின்றாடும் இறைவனது திருக்கோலத்தைக் கண்டு உளம் உருகி வழிபட்டு 'கொங்கை திரங்கி', 'எட்டி இலவம்' என்று தொடங்கும் திருப்பதிகங்களைப் பாடிப் போற்றி பெருமானது தூக்கிய திருவடி நிழற்கீழ் என்றும் நீங்காது வாழும் பெருவாழ்வு பெற்றார். பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் இவ்வரலாற்றை அழகுற விரித்துரைத்துள்ளார். முன்னோர் வழியில் அம்மையார் அருளிய திருவாலங்காட்டுத் திருப்பதிகங்கள் தேவாரத் திருப்பதிகங்களுக்கெல்லாம் முன்னோடியாக முதற்கண் தோன்றிய சிறப்பால் மூத்த திருப்பதிகங்கள் எனப் பெற்றன. அம்மையார் அருளிய இரண்டு திருப்பதிகங்களில் முதல் திருப்பதிகம் நட்டபாடைப் பண்ணமைப்பில் பாடப்பெற்றது. திருஞான சம்பந்தர் இப்பண்ணமைப்பிலேயே 'தோடுடைய செவியன்' என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்துள்ளார். மற்றொரு திருப்பதிகம் இந்தளம் என்னும் பண்ணமைப்பில் பாடப்பட்டுள்ளது.
|