பக்கம் எண் :

1099பதினொன்றாந் திருமுறை

சுந்தரர் தாம் அருளிய திருப்பதிகங்களில் முதலாவதாகிய 'பித்தாபிறைசூடி' என்னும் திருப்பதிகத்தை இவ் இந்தளப் பண்ணிலேயே பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தரும் சுந்தரரும் அம்மையார் தலையால் நடந்த திருவாலங்காட்டைக் காலால் மிதித்தல் கூடாதென ஊர் எல்லையிலிருந்தே திருப்பதிகங்கள் அருளியுள்ளனர்.

இவற்றை நோக்கும்போது நம் ஆசாரியர்கள் அம்மையார் காட்டிய நெறியில் நின்று இறைவனைப் போற்றிய பாங்கையும் அம்மையாரிடம் அவர்கள் காட்டிய பக்திமையையும் நாம் நன்குணரலாம்.

காலம்

திருஞானசம்பந்தர் தாம் அருளிய திருஆலங்காட்டுத் திருப்பதிகத்தில்

வணங்கும் சிறுத்தொண்டர்

வைகல்ஏத்தும் வாழ்த்தும் கேட்டு

அணங்கும் பழையனூர் ஆலங்காட்டு

எம் அடிகளே

எனக் குறித்தருளுவதால் அம்மையார் காலம் ஞானசம்பந்தர் காலமாகிய கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது எனவும், இவரது யாப்பமைதி சொற்பொருள் அமைதி முதலியவற்றைக் கொண்டு ஆராயுங்கால் இவரது காலம் இருண்ட காலப்பகுதி எனப்படும். கி.பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டாகக் கொள்ளலாம் என்பதும் ஆய்வாளர் கருத்தாகும்.

3. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

இத்திருமுறையில் ஐந்தாவது பிரபந்தமாகிய சேத்திரத் திருவெண்பாவைஅருளியவர் ஐயடிகள் காடவர்கோன் நாயனார். இவர் திருத்தொண்டத் தொகையில் சுந்தரரால் 'ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்' எனப் போற்றப் பெறுபவராவார். சேக்கிழார் பெரிய புராணத்தில் இந்நாயனாரின் வரலாற்றை விளங்க விரித்துரைத்துள்ளார்.

பெயா விளக்கம்

காடவர் என்பது பல்லவ மன்னர் குலத்தினரைக் குறிக்கும் பொதுப்பெயர். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூஉவாகும்.