சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் 'கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற் சிங்கன் அடியார்க்கும் அடியேன்' எனக் குறிப்பிடப்பெறும் மன்னன் காஞ்சியில் கைலாசநாதர் கோயிலைக் கட்டிய இராஜசிம்மப் பல்லவனாவான் என்றும் அம்மன்னனது தந்தையாகிய முதலாம் பரமேசுவர வர்மனே ஐயடிகள் காடவர்கோன் ஆவார் எனவும் அவர் தெளிவு செய்துள்ளார். முதலாம் பரமேசுவரவர்மன் காலத்தில் பெரும் போர் ஒன்று நிகழ்ந்தது. சாளுக்கிய வேந்தனாகிய இரண்டாம் புலிகேசியின் மகன் விக்கிரமாதித்தன் என்பான் தமிழ் மாநிலத்தைக் கைப்பற்றக் கருதி தமிழகம் வந்து இம் மன்னனோடு பெரும் போர் புரிந்து வென்று பாண்டி நாட்டைக் கைப்பற்ற முனைந்தபோது பாண்டியன் நெடுமாறன் மகனாகிய கோச்சடையன் என்பானிடம் தோல்வியுற்றுத் திரும்ப நேர்ந்தது. இவ்வேளையில் அவனிடம் தோற்ற பல்லவனாகிய முதலாம் பரமேசுவர வர்மன் தன் படைகளுடன் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள பெருவளநல்லூரில் விக்கிரமாதித்தனோடு போரிட்டு வெற்றி கொண்டான். தோற்ற விக்ரமாதித்தன் ஒரு கந்தையைப் போர்த்திக்கொண்டு தன் நாடு திரும்பினான். விக்கிரமாதித்தனைப் பரமேசுவர வர்மன் வெற்றி கொண்டதைக் கைலாசநாதர் கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது. சேக்கிழார் ஐயடிகள் காடவர்கோனின் பெருவீரத்தைக் குறிப்பிடும் பாடல் இப்போரைக் குறித்ததாகலாம். ஆதலின் அம்மன்னனே ஐயடிகள் என்பதையும் அறியலாம். பரமேசுவரவர்மன் கூரம் என்ற ஊருக்குப் பரமேசுவர மங்கலம் எனப் பெயர் சூட்டி அவ்வூரில் விச்சாவிநீத பல்லவ மன்ன பரமேசுவரக்கிருகம் என்ற சிவாலயத்தை முதன் முதல் கற்றளியாகக் கட்டிய பெருமைக்கு உரியவன். மாமல்லபுரத்தில் இவன் பாட்டனாகிய நரசிம்மவர்மன் காலத்தில் தொடங்கி இம் மன்னனால் முற்றுவிக்கப்பட்ட ஆலயத்தில் காணும் கல்வெட்டால் இவன் வடமொழி தென்மொழிகளில் வல்லவன் என்பதை உணரலாம். இவ்வாறு பெருவீரனாகவும் சிவநெறியாளனாகவும் புலமையாளனாகவும் விளங்கிய பரமேசுவர வர்மன் தன் ஆட்சியைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்துவிட்டு, தலங்கள் தோறும் சென்று வழிபட்டு வெண்பா மாலைகளால்
|