பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை1102

இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்ததால் அவன் மகனாலும் குடிமக்களாலும் இம்மன்னன் 'ஐயடிகள்' எனப் போற்றப்பெற்றான் என்று கொள்ளலாம். இவர் காலம் கி.பி. 670 முதல் 685 வரையாகும்.

4. சேரமான் பெருமாள்நாயனார்

இத்திருமுறையில் பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, திருக்கைலாய ஞான உலா ஆகிய மூன்று பிரபந்தங்களை அருளிச் செய்தவர் சேரமான் பெருமாள் நாயனார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையில் 'கார்கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன்' எனப் போற்றப்பெற்ற இவர் சேரமன்னர். சுந்தரரின் இனிய தோழர். சுந்தரருடன் கயிலை சென்றவர். ஆலவாய் இறைவர் பாணபத்திரர் பொருட்டுத் திருமுகப்பாசுரம் அருளிய பெருமை உடையவர். இந்நாயனார் வரலாறு பெரிய புராணத்தில் சேக்கிழார் சுவாமிகளால் கழறிற்றறிவார் புராணம் வெள்ளானைச் சருக்கம் ஆகியவற்றில் சுந்தரர் வரலாற்றோடு இணைத்துக் கூறப்பட்டுள்ளது.

அரசுரிமை ஏற்றது

தமிழகத்தில் முடியுடை வேந்தர்களாகத் திகழ்ந்த மூவருள் சேரர் குடியில் தோன்றியவர் இவர். குடபுலமாகிய மலை நாட்டில் திருவஞ்சைக் களத்தில் சேரர்குலம் செய்த சிவ புண்ணியங்களின் பயனாய்த் தோன்றியவர். பெற்றோர் பெருமாக்கோதையார் எனப் பெயரிட்டு வளர்த்தனர். இளமை முதல் இந்நாயனார் திருஅஞ்சைக் களத்து இறைவர்பால் பேரன்புடையவராய் விளங்கினார். உலகின் இயல்பும் அரசியலும் உறுதியல்ல எனத் தெளிந்து புலர்வதன் முன் எழுந்து ஆலயத்தைத் திருஅலகிட்டும், திரு மெழுக்கிட்டும் பூமாலை புனைந்தும் தொண்டுகள் செய்து இறைவனை வழிபட்டு வந்தார். அந்நாட்டை அரசு புரிந்த செங்கோற் பொறையன் என்பான் தன் அரச வாழ்வைத் துறந்து தவம் மேற்கொண்டு சென்றதால் அமைச்சர் முதலானோர் சேரர் குடியில் தோன்றி திருஅஞ்சைக்களத்தில் சிவத்தொண்டு புரிந்து வந்த இப்பெருமாக்கோதையாரை அரசுரிமை ஏற்க அழைத்தனர். பெருமாக்கோதையார் தவம் செய்துவரும் சிவத் தொண்டுக்கு இடையூறாகுமே என எண்ணியும் அஞ்சைக் களத்து இறைவரை வழிபட்டு அவர் திருவுளம் அறியும்