குறிப்புடன் நின்றார். சேரநாட்டு ஆட்சி உரிமையை அவர் ஏற்குமாறு திருவருள் உணர்த்திற்று. இறையருளால் மக்களுயிர்க்கே அன்றி அனைத்துயிர்க்கும் நலம் செய்து அவர் ஆட்சி நடத்துமாறு எல்லா உயிரினங்களும் பேசும் மொழிகளை அறியும் அறிவாற்றலையும் தறுகண்மை, படைவன்மை, கொடைவண்மை முதலானவற்றையும் பெற்றார். பிற உயிர்கள் பேசும் மொழிகளை இவர் பெற்ற காரணத்தால் கழறிற்றறிவார் என்ற சிறப்புப் பெயர் இவர்க்கு வழங்கலாயிற்று. திருவுலா அரசுரிமை ஏற்றல் இறைவன் திருவுள்ளம் என்பதை உணர்ந்த கோதையார் சேரமன்னராய் மணிமுடி சூடி திருவஞ்சைகளத்திறைவனை வழிபட்டு யானை மீது அரச மாளிகைக்கு திருவுலாப் போந்தார். அவ்வாறு அவர் எழுந்தருளும்போது எதிரே ஒரு வண்ணான் உவர்மண் பொதி சுமந்து வந்தான். மழை நீரில் நனைந்ததால் உவர் மண் கரைந்து உடல் முழுதும் வழிந்ததும் வெயிலில் அம்மண் காய்ந்ததும் அவன் முழுநீறு பூசிய அடியவர் போலக் காட்சி அளித்தான். அவனைக்கண்ட சேரர்கோ சிவனடியார் ஒருவர் எதிரே வருகிறார் எனக்கருதி யானையினின்றும் கீழே இறங்கி வந்து அவனை வணங்கினார். அவன் அச்சம் மீதூர்ந்தவனாய் 'அடியேன் தங்கட்கு அடித்தொழில் புரியும் வண்ணான்' என்று கூறக்கேட்டு 'அடியேன் அடிச்சேரன் அன்புகெழுமிய சிவவேடத்தை நினைப்பித்தீர். வருந்தாது செல்லும்' என்று கூறி வழியனுப்பி வைத்து யானைமீது இவர்ந்து அரண்மனையை அடைந்தார். இதனை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருஅந்தாதியில், மன்னர் பிரான்எதிர் வண்ணான் உடல்உவர் ஊறி நீறார் தன்னர் பிரான்தமர் போலவருதலும் தான் வணங்க என்னர் பிரான்அடி வண்ணான் எனஅடிச் சேரன்எனும் தென்னர் பிரான்கழறிற்றறி வான்எனும் சேரலானே எனக்கூறியுள்ளார். கழறிற்றறிவார் தமிழகத்தின் ஏனைய மன்னர்களோடும் நட்புக் கொண்டொழுகி நல்லாட்சி புரிந்தார். நாள்தோறும் தில்லை நடராசப் பெருமானை நினைந்து சிவ பூசை செய்து வந்தார். பெருமான் அவரது அன்பு வழிபாட்டை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக நாள்தோறும் சிவ பூசை முடிவில் தன்பாதச் சிலம்பொலியைக் கேட்பித்தருளி வந்தார்.
|