பாணபத்திரர்க்குப் பரிசில் ஒருநாள் ஆலவாய் இறைவர் பாணபத்திரர்க்கு மாண் பொருள் கொடுத்துதவுமாறு எழுதியனுப்பிய திருமுகப் பாசுரத்தைக்கண்டு பாணபத்திரர்க்கு அளவற்ற நிதிக் குவைகளை அளித்து மகிழ்ந்தார். சிலம்பொலி தாழ்த்தது சிவபிரான் சேரமானைச் சுந்தரருடன் நட்புக் கொள்ளச் செய்யும் திருவுளக்குறிப்பால் நாள்தோறும் பூசை முடிவில் கேட்பிக்கும் சிலம்பொலியைக் காலந்தாழ்த்துக் கேட்பித் தருளினார். கழறிற்றறிவார் இவ்வாறு நிகழ்தற்குத் தான் செய்த பூசையில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருக்குமோ என ஐயுற்ற போது தில்லை முன்றிலில் சுந்தரன் நம்மைப் பாடிக் கொண்டிருக்கும் பாடலில் ஈடுபட்டதால் உன் பூசையை ஏற்கக் காலந்தாழ்க்க நேர்ந்தது எனக் கூறக்கேட்டு சுந்தரரைத் தரிசித்து மகிழ வேண்டித் தில்லையை அடைந்து ஆனந்தக் கூத்தனை வழிபட்டு ஆரா இன்பெய்திப் பொன் வண்ணத்தந்தாதி பாடிப் போற்றினார். பெருமான் அதனை ஏற்றருளியதற்கு அடையாளமாகத் திருச்சிலம்பொலி காட்டியருளினார். பின்னர் சுந்தரர் திருவாரூர் சென்றதை அறிந்து திருவாரூரை அடைந்து சுந்தரரைத் தரிசித்து மகிழ்ந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் தழுவி வணங்கி உவகை உற்றனர். இருவரும் திருவாரூர்ப் பூங்கோயில் சென்று வழிபட்டு மன மகிழ்வுற்றனர். சேரர்பிரான் திருமும்மணிக்கோவை என்னும் பிரபந்தத்தால் பெருமானைப் போற்றினார். பின்னர் சேரமான் பெருமாள் சுந்தரரின் வேண்டுகோளுக்கிணங்கி அவர்தம் திருமாளிகையில் பல நாட்கள் அவரோடு உடனுறைந்து மகிழ்ந்தார். தல யாத்திரை சுந்தரர் சேரமான் பெருமாள் இருவரும் பாண்டிநாடு சென்று திருஆலவாய் முதலான தலங்களைத் தரிசிக்க விரும்பி யாத்திரை மேற்கொண்டனர். சேரமான் தனக்குத் திருமுகம் அனுப்பியருளிய பெருமானைக் காணும் பெருவேட்கையோடு சுந்தரருடன் மதுரை சென்றார். பாண்டிய மன்னனும் அம் மன்னன் மகளை மணந்த சோழ மன்னனும் இவ்விரு பெருமக்களையும் இனிதே வரவேற்றுபசரித்தனர். மூவேந்தர் சூழச் சுந்தரர் பாண்டித் தலங்கள் பலவற்றைத் தரிசித்தார். பின்னர் சேரமானும் சுந்தரரும் திருவாரூர் மீண்டனர்.
|