பக்கம் எண் :

1107பதினொன்றாந் திருமுறை

இப்பிரபந்தங்களில் ஒன்பதாவதாக அமைந்துள்ள திருமுருகாற்றுப்படை சங்க நூலாகிய பத்துப் பாட்டில் முதலாவதாக அமைந்துள்ளது. இதனைப் பாடியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று குறிக்கப் பெற்றுள்ளது. கடைச்சங்கப் புலவராகிய இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டாகும்.

ஏனைய பிரபந்தங்கள் சொல் வழக்கு முதலியவற்றாலும் பொருள் அமைதியாலும், தேவார திருவாசகக் கருத்துக்களும் சொற்றொடர்களும் இடம் பெற்றிருப்பதாலும் சமய குரவர்க்குப்பின் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நக்கீரர் பெயர் தாங்கிய ஒருவரால் செய்யப் பெற்றனவாதல் வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

பெயர் விளக்கம்

நக்கீரர் என்ற பெயரில் கீரன் என்பது இயற்பெயர். ந, சிறப்புப் பொருள்தரும் இடைச்சொல். இப்பெயரை நல் கீரன் என்பதன் திரிபாகக் கொள்வாரும் உளர். பதினொன்றாம் திருமுறையில் சமயஞ்சார்ந்த அருளாளர் நிலையில் நக்கீர தேவ நாயனார் என இவர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.

திருவிளையாடற்புராணத்தில்

பெரும்பற்றப்புலியூர்நம்பி, பரஞ்சோதி முனிவர் ஆகியோர் இயற்றிய திருவிளையாடற் புராணங்களில் கூறப்படும் நக்கீரர் வரலாறே இன்றைய சமய உலகில் பெரு வழக்காயுள்ளது.

பாண்டிய மன்னன் அகப்பொருள் நூல் கிடைக்கவில்லையே என மனங்கவன்ற காலத்தில் திருஆலவாய் இறைவன் 'அன்பின் ஐந்திணை' எனத் தொடங்கி அகப்பொருள் நூல் ஒன்றை எழுதி அவன்பால் சேர்ப்பித்து அம் மன்னன் மனக் கவலையைப் போக்கியருளினார். அந்நூலைச் சங்கப்புலவர் அனைவரும் பாராட்டிப் போற்றினர். நக்கீரர் மட்டும் அந்நூலைக் குறைகூற இறைவன் தானே தமிழ்ப்புலவராய்த் தோன்றி நக்கீரரின் மன மருட்சியை நீக்கி அவருக்குத் தெளிவு ஏற்படுத்தி மறைந்தருளினார்.

சண்பகமாறன் என்னும் பெயரினனாகிய பாண்டிய மன்னன் தன் தேவியோடு தனித்து உலாவியபோது அவள் கூந்தலிலிருந்து தோன்றிய நறுமணத்தை நுகர்ந்து அம்மணம் பூவொடு இணைந்ததால் உண்டான செயற்கை மணமா?