மீது ஏறித் திருவஞ்சைக்களம் சென்று சுந்தரர் தேவ கணங்களுடன் திருக்கயிலை செல்வதைக் கண்டு களித்துத் தாமும் அவருடன் கயிலை செல்லும் குறிப்போடு குதிரையின் காதில் திருஐந்தெழுத்தினை ஓதி அக் குதிரையின் மீது அமர்ந்து வான வெளியில் சுந்தரர் செல்லும் வெள்ளை யானையை வலம் வந்து அதன் முன்னே சென்றார். இருவரும் தெற்கு வாயில் வழியாகத் திருக்கயிலையை அடைந்தனர். சுந்தரர் உள்ளே சென்று இறைவனையும் இறைவியையும் வணங்கிப் போற்றினார். சேரமான் வருகைனயச் சிவபிரானிடம் விண்ணப்பிக்கப் பெருமான் சேரர்கோனை உள்ளே வரச்செய்து 'இங்கு நாம் அழையாமல் வந்தது ஏன்?' எனக் கேட்கச் சேரமான் திருவருள் வெள்ளம் சுந்தரருடன் என்னையும் ஈர்த்துக் கொணர்ந்து இங்கே நிறுத்தியது. அடியேன் தேவரீரைப் பாட்டுடைத் தலைவராக வைத்து திருஉலாப் புறம் ஒன்று பாடியுள்ளேன் அதனைத் திருச் செவி சார்த்தியருள வேண்டுமென வேண்டினார். பெருமான் அதனைச் சொல்லுக எனக்கேட்கத் திருக்கயிலாய ஞான உலாவைத் திருக்கயிலையில் பெருமான் திருமுன்னர் அரங்கேற்றினார். பெருமான் சுந்தரரோடு சேரமானையும் சிவகணத்தலைவராய் நம்பால் நிலைபெற்றிருப்பீராக எனப் பணிக்கச் சேரமான் பெருமாள் நாயனாரும் திருக்கயிலையில் திருத்தொண்டு புரிந்து மகிழ்ந்துறைவாராயினார். திருக்கயிலையில் சேரமான் பாடியருளிய திருவுலாவைச் செவிமடுத்த மாசாத்துவான் என்ற ஐயனார் சோழநாட்டுத் திருப்பிடவூரில் அந்நூலை வெளியிட்டு அதனை நிலவுலகில் விளங்கும்படிச் செய்தருளினார் என்பது பெரிய புராணத்தில் காணப்படும் இந்நாயனார் வரலாறாகும். இவரது காலம் சுந்தரர் காலமாகிய கி.பி. 8-ஆம் நூற்றாண்டாகும். 5. நக்கீரர் இத்திருமுறையில் கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி, திருஈங்கோய்மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருஎழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப்பிரசாதம், கார்எட்டு, போற்றித்திருக்கலி வெண்பா, திருமுருகாற்றுப்படை, திருக்கண்ணப்ப தேவர் திருமறம் ஆகிய பத்துப் பிரபந்தங்கள் நக்கீரதேவர் அருளியனவாக உள்ளன.
|