தனி வெண்பாக்கள் | குன்றம் எறிந்தாய் குரைகடலில் சூர்தடிந்தாய் புன்தலைய பூதப் பொருபடையாய் - என்றும் இளையாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே உளையாய்என் உள்ளத் துறை | | 1 |
| குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் - இன்றென்னைக் கைவிடா நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும் மெய்விடா வீரன்கை வேல். | | 2 |
| வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை. | | 3 |
| இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்குக் கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா - முன்னம் பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட தனிவேலை வாங்கத் தகும். | | 4 |
| உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக் கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்திவாழ் வே. | | 5 |
| அஞ்சு முகும்தோன்றில் ஆறு முகம்தோன்றும் வெஞ்ச மரில்அஞ்சல்என் வேல்தோன்றும் - நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகாஎன் றோதுவார் முன். | | 6 |
| முருகனே செந்தி முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான். | | 7 |
| காக்கக் கடவியநீ காவா திருத்தக்கால் ஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்கும் கடம்பா முருகா கதிர்வேலா நல்ல இடங்காண் இரங்காய் இனி. | | 8 |
|
|
|