என வந்துள்ள பாடம், “செலவ” எனக் கொள்ளப்படுகின்றது. புலவராற்றுப் படையும் பரிசில் பெறச் செல்லும் புலவனை, ‘முதுவாய் இரவல’ என விளித்தல் மரபு என்பது புறநானுற்று 180ஆம்பாட்டால் விளங்கும். “முதுவாய் இரவலன்” என்பது இவ் ஆற்றுப்படை அடி - 284-இல் படர்க்கையாக வந்துள்ளது. குறிப்புரை அடி - 1 : உலகம் - உயிர்த் தொகுதி ‘உவப்ப ஏர்பு வலன் திரிதரு’ என இயைக்க. ஏர்பு - எழுந்து; புறப்பட்டு. ‘வலன் ஆக’ என ஆக்கம் வருவிக்க. வலமாதல் மேருமலைக்கு ஆதலின் அதனையும் சொல் லெச்சமாக வருவிக்க. அடி.2 : ‘திரிதரு ஞாயிறு’, பலர்புகழ் ஞாயிறு எனத் தனித்தனி இயைக்க. ‘பலரும்’ என உம்மை விரித்து, ‘எல்லாச் சமயத்தாரும்’ என்பர் நச்சினார்க்கினியர், ‘ஞாயிற்றைக் கடலிலே கண்டாங்கு. அடி. - 3 : இமைக்கும் ஒளி என்க. கடல், இங்கே கீழ்க்கடல். எனவே, ஞாயிறு இள ஞாயிறாயிற்று. இமைக்கும் ஒளி - இமைத்துப் பார்க்கப்படும் ஒளி. இமையாது மார்க்கும் சிற்றொளியன்று ஆதலின், இமைத்துப் பார்த்தல் வேண்டு வதாயிற்று. ஓவு அறச் சேண் விளங்கு அவிர் ஒளி - எவ்விடமும் எஞ்சாதபடி, நெடுந்தொலைவான பரப்பு இடத்தும் சென்று விட்டு விட்டு விளங்குகின்ற ஒளி. என்றது முருகனது திருமேனி ஒளியை. “ஓவுஅற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி” ஞாயிறாகிய உவமைக்கும் முருகனாகிய பொருளுக்கும் உரிய பொதுத் தன்மை, “கடல்” என்னும் உவமை மயில் ஊர்தியைக் கருதிக் கூறினமையால் அதன்மேல் இருந்த திருமேனியின் ஒளி’ என உரைக்க. அங்ஙனம் உரையாக்கால், வாளா ‘கண்டாங்கு’ என்னாது, “கடற்கண் டாங்கு” என்றதனால் பயன் இன்றாம். அடி - 4 : உறுநர் - அடைக்கலமாக அடைந்தோரை யெல்லாம். தாங்கிய நோன்தாள் - துன்பக் குழியில் வீழாது தாங்கின வலிய திருவடி. மதன் உடை நோன்தாள் - அறியாமையை உடைத்தெறிகின்ற வலிய திருவடி. அடி - 5 : செறுநர்த் தேய்த்த கை - அழித்தற்கு உரியவரை அழித்த கை. செல் உறழ்கை - (கைம்மாறு கருதாது வழங்கு தலில்) மேகத்தை வென்ற கை. தடக் கை - (முழந்தாள் அளவும்) நீண்டகை. அடி - 6 : மறு இல் கற்பின் வாள் நுதல் கணவன் - (பின்முறை வதுவைப் பெருங்குலக் கிழத்தியாராகிய வள்ளி நாயகியார்மேல் பொறாமை கொள்ளுதலாகிய) குற்றம் சிறிதும் இல்லாத கற்பினையும், (பொறாமையில்லாமையால் வெகுண்டு வேர்த்தல் இல்லாது எப்பொழுதும் மகிழ்ந்தே பார்த்தலால்) ஒளி மழுங்குதல் இல்லாத நெற்றியினையும் உடைய தெய்வயானையார்க்குக் கணவன்.
|