68. | இங்கிருந்து சொல்லுவதென்! எம்பெருமான் எண்ணாதே எங்கும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில் ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம் நாமவனைக் காணலுற்ற ஞான்று. | | 25 |
69. | ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவன போன்ற கறைமிடற்றான் பொன்மார்பின் - ஞான்றெங்கும் மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே அக்கயலே வைத்த அரவு. | | 26 |
68. அ. சொ. பொ.: ‘எங்கள் பெருமான், எங்கும் சென்று பிச்சை யேற்பதையும், இரவிலே சுடுகாட்டில் ஆடுவதையும், ‘இவை இழிவல்லவோ’ என்று சிறிதும் எண்ணிப் பாராமலே செய்தற்குரிய காரணத்தை நாம் இங்கேயிருந்து கொண்டு என்ன என்று சொல்ல முடியும்? முடியாது. ஆகவே, நாம் அவனை நேரிற் காண முடிந்த பொழுது அவனிடமே, ‘இவை எதற்கு’ என்று கேட்டுத் தெரிவோம்’ (அது வரையில் சும்மா இருப்போம்) என்பது இப்பாட்டின் பொருள். ‘இறைவனது செயலின் இரகசியங்களை உயிர்கள் அறிதல் அரிது. அதனால் சிலர் அவனை அவை பற்றி இகழவே செய்வர். அவர்களோடு நாம் சேர்ந்து விடுதல் கூடாது; தனியே அமைந்திருத்தலே தக்கது’ என்பது குறிப்பு. பொங்குதல் - மிகுதல். அதற்கு ‘இருள்’ என்னும் வினைமுதல் வருவிக்க. ஈமம் - பிணஞ்சுடும் விறகு. ‘பலி திரிதல், உலகத்தைப் பற்றி நிற்கும் உயிர்கள் அப்பற்றினை விடுதற் பொருட்டு என்பதும், “ஈம வனமாவது உலகம் முற்றும் ஒடுங்கிய நிலை’ என்பதும், ‘அங்கு இரவில் ஆடுதல்’ என்பது, ‘யாதொன்றும் இல்லாது மறைந்த அந்தக் காலத்தில், உலகத்தை மீளத் தோற்றுவதற்கு ஆவனவற்றைச் செய்தலாகிய சூக்கும நடனம்’ என்பதும் ஆகிய உண்மைகளை அறிந்தோர் அறிவர் என்பதும் கருத்து. 69. அ. சொ. பொ.: “கறை மிடற்றான்” என்பதை முதலிற் கொள்க. ஞான்ற - நான்ற; தொங்கிய. குழல் - குழல்போலப் புரிசெய்த. வரை - கீற்று; என்றது கம்பியை. போல், அசை போன்ற - போன்றன. “பொன் மார்பு” என்பதில் பொன் - அழகு. அக்கு - எலும்பு மாலை, ‘அதன் அயலிலே வைத்த அரவு (பாம்பு) அயல் (புறத்தில்) ஏனை எல்லாவற்றிலும் மிக்குத் தோன்றும் முறையில் எங்கும் ஞான்று விளங்கி மிளிரும்” என்க. விளங்கி மிளிர்தல், ஒரு பொருட் பன்மொழி. இது பெருமானது திருவுருவத்தைப் புகழ்ந்தவாறு.
|