694. | மதியாருஞ் செஞ்சடையான், வண்கொன்றைத் தாரான் மதியாரும் மாலுடைய பாகன் - மதியாரும் அண்ணா மலைசேரார் ஆரோடுங் கூட்டாகி அண்ணா மலைசேர்வ ரால். | | 38 |
695. | ஆல நிழற்கீழ் இருப்பதுவும் ஆய்வதறம் ஆலம் அமுதுசெயல் ஆடுவதீ, - ஆலந் துறையுடையான் ஆனை உரியுடையான், சோற்றுத் துறையுடையான் சோராத சொல்லு. | | 39 |
696. | சொல்லாயம் இன்றித் தொலைவின்றித் தூநெறிக்கண் சொல்லாய்ப் பெருத்த சுடரொளியாய்ச் - சொல்லாய வீரட்டத் தானை, விரவார் புரம்அட்ட வீரட்டத் தானை விரை. | | 40 |
தருவான்) என இயைத்து முடிக்க. ஈற்றில் எஞ்சி நின்றது அவாய் நிலை. சிவபெருமான் முன்னே முனிந்தானாயினும் பின்னே திருவுளம் இரங்குபவன் என்பது அவன் இராவணனை முன்னே தோள்நெரித்துப் பின்னே அருளிய வாற்றால் விளங்கும்’ என்றபடி. 694. குறிப்புரை: “மதி” மூன்றில் முதலது பிறை; இறுதியது நிறைநிலா. இடையது அறிவு. மால் சிவபிரானைப் பலமுறை வழிபட்டமை பற்றி அறிவு நிறைந்தவனாகக் கூறினார். அண்ணாமலை - திருஅண்ணாமலை. ஆரோடும் . மனைவி, மக்கள் முதலிய சுற்றத்தாரும், மற்றும் நண்பரும் ஆகிய யாரோடும். கூட்டு ஆகி. கூடி வாழும் வாழ்க்கையராகி. அண்ணாமல் - நெருங்காமல்; ‘வாழ்விழந்த’ என்றபடி. ஐசேர்வார் - மிடற்றில் கோழைவந்து சேரப் பெறுவார். ஆல், அசை. 695. குறிப்புரை: “ஆலந்துறை யுடையான் என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. ஆலந்துறை, அன்பில் ஆலந்துறை. பாடல் பெறாது வேறு உளவேனும் கொள்க. ‘அவனது சொல் சோராதன; பயனளியாது போகாதன. அவன் இருப்பது ஆல நிழற்கீழ்; ஆய்வது அறம்; அமுது செய்வது ஆலம், (நஞ்சு) ஆடுவது தீ’ என்க. ‘ஆடுவது’ என்பது ஈறு குறைந்து நின்றது, சிவபெருமானது இயல்புகளை விதந்தவாறு. “இருப்பதுவும்” என்றாற்போல ஏனையவற்றிலும் இழிவு சிறப்புண்மை - உயர்ந்தவற்றைத் தாழ்ந்தனபோலக் கூறிப் புகழ்ந்தவாறு. 696. குறிப்புரை: சொல் ஆயம் - சொற்கூட்டம்; பலவகை மொழிகள். ‘அவை இன்றி’ என்றது, ‘அவைகளைக் கடந்து’ என்றபடி.
|