கட்டளைக் கலித்துறை 827. | சங்கிடத் தானிடத் தான்தன தாகம் சமைந்தொருத்தி அங்கிடத் தாள்,தில்லை அம்பலக் கூத்தற்(கு); அவிர்சடைமேல் கொங்கிடத் தார்மலர்க் கொன்றையென் றாயெங்கை நீயுமொரு பங்கிடத் தான்வல்லை யேல்;இல்லை யேலுன் பசப்பொழியே. | | 18 |
இங்குச் செவிலி நற்றாய்க்கு இவ்வாறு கூற அமைவதாயிற்று. இனி, இறைவன் மேலவாய் வரும் அகத்துறைப்பாடலின் உள்ளுறைப் பொருள் தலைவியராவார் பக்குவான்மாக்களும், பிறர் அபக்குவான்மாக்களும், பாசங்களுமே யாதலாலும் அவ்வுள்ளுறை நோக்கில் இஃது அமைவுடையதேயாம். இது கைக்கிளைத் தலைவியது வேறுபாடு கண்டு ஐயுற்று வினவிய நற்றாய்க்குச் செவிலி அமைவு கூறும் முகத்தால் அறத்தொடு நின்றது. ‘முதியாராகிய நாமே அந்நிலையை அடைவோம் என்றால்,இளையளாகிய நம் மகள் இந்நிலையை அடைந்தது வெகுளத்தக்கதோ’ என்றபடி. 827. குறிப்புரை: சங்கு இடத்தான்- ‘பாஞ்சசன்னியம்’ என்னும் சங்கினை இடக் கையிலே உடையவன்; திருமால். அவனை இடப் பாகத்திலே உடையவன் சிவபெருமான்; அம்பலவாணன். ஆகம் - திருமேனி. திருமேனியில் ஒருத்தி (உமை) அவனுக்குச் சமைந்து அந்த இடப்பாகத்தையே பற்றி யிருக்கின்றார். இந்நிலைமையில் அவளுக்கு நீ தங்கை யாகும்படி. ‘அவ்வம்பலவாணனுடைய முடிமேல் உள்ள கொன்றைமலர் மாலை எனக்கு வேண்டும்’ என்கின்றாய். அதனை நீ விடாப்பிடியாய் விரும்புவதாயின், மால் உமை என்னும் அவ் இருவரைப்போல நீயும் அந்த இடப்பாகத்தை உனக்கு உரியதாகப்பற்றிக் கொள்ளும் வல்லமையிக்கு மாயின் விரும்பு; அஃது இல்லையேல். உன் விருப்பத்தை விட்டொழி.“பசப்பு ஒழி” என்றது. ‘விருப்பத்தை ஒழி’ என்றதேயாம். ‘திருமாலையும், உமையையும் தனது சக்திகளாக உடையவன் சிவபெருமான்’ என்பதும், ‘ஏனையோர்க்கு அந்நிலைகூடா’ என்பதும் இங்க மறைமுகமாக விளக்கப் பட்டது. கொங்கு இடு அத்தார் - தேனைச் சொரிகின்ற அந்தமாலை. “எங்கை” என்பதன்பின் (என) என்று ஒருசொல் வருவித்து, ‘அவள் உன்னை - என் தங்கை - என்றும் சொல்லும் படி என உரைக்க. இது, தன்னை தூதுவிடக்கருதிக் குறிப்பாற் சில கைக்கிளைத் தலைவியைத் தோழி அருமை கூறி ஆற்றுவித்தது. “கொன்றை” என்பதன்பின் வேண்டும்’ என்பது எஞ்சிநின்றது. “வல்லையேல்” என்பதன்பின், ‘வேண்டு’ என்பது வருவிக்க.
|