பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை586

விருத்தம்

828.

ஒழிந்த தெங்களுற வென்கொ லோ!எரியில்

ஒன்ன லார்கள்புரம்முன்னொர்நாள்

விழுந்தெ ரிந்துதுக ளாக வென்றிசெய்த

வில்லி தில்லைநகர்போலியார்

சுழிந்த உந்தியில் அழுந்தி மேகலை

தொடக்க நின்றவர் நடக்கநொந்(து)

அழிந்த சிந்தையினும் வந்த தாகிலுமொர்

சிந்தை யாயொழிவ தல்லவே.

19

அகவற்பா

829.

அல்லல் வாழ்க்கை வல்லிதின் செலுத்தற்குக்
கைத்(து)ஏர் உழந்து கார்வரும் என்று
வித்து விதைத்தும், விண்பார்த் திருந்தும்,
கிளையுடன் தவிரப் பொருளுடன்கொண்டு

5முளைமுதிர் பருவத்துப் பதியென வழங்கியும்,

828. குறிப்புரை: இப்பாட்டு மேற் பலவிடத்தும் வந்தன போலப் பாடாண் கைக்கிளையாகாது.“சொல்லெதிர் பெறான் சொல்லி யின்புறல்”1 என்னும்ஆண்பாற் கைக்கிளையாய அகப்பாட்டு. இதிற் சிவபெருமான் பாட்டுடைத் தலைவன் மட்டுமே. கிளவித் தலைவன் வேறுகொள்ளப்பட்டான். “எங்கள் உறவு”என்றது, தன் கருத்து மாத்திரையே பற்றி, “என்கொலோ”என்றது, தலைவியது கருத்து வேறானமைக்குக் காரணத்தைஆராய்ந்தது. வென்றி செய்த - வெற்றி படைத்த. தில்லைநகர் போலியார் - தில்லைத் தலத்தைப் போல அருமையுடையவர்; தலைவி. சுழிந்த - நீர்ச் சுழிபோன்ற. தொடக்க நின்று - பிணிக்கநின்று. அழிந்தசிந்தை - கெட்டே போன மனம். இன்னும் வந்ததாகிலும்- ஒருகால் உயிர்த் தெழுந்து திரும்பிவந்தது. என்றாலும்; அஃது ஒன்றாயிராது பலவாய்ச் சிதறுவதாம். ‘ஆகவேஇனி உய்வது அரிது’ என்பது குறிப்பெச்சம் ‘அழுந்தி, நின்று, நொந்து,, அழிந்த சிந்தை’ என்க. “ஒழிவது” என்பதில் ஒழி, துணிவுப் பொருண்மை விகுதி. அல்ல என்பது ஒருமைப் பன்மை மயக்கம்.

829.குறிப்புரை: அல்லல் வாழ்க்கை, உடல் ஓம்பும் வாழ்க்கை. வல்லிதின் - திறமையாக. செலுத்துதற்கு - நடத்துதற் பொருட்டு


1. தொல் - பொருள் - அகத்திணையியல்