| 1252. | ஏந்தும் உலகுறு வீரெழில் நீலநக் கற்குமின்பப் பூந்தண் புகலூர் முருகற்கும் தோழனைப் போகமார்ப்பைக் காந்துங் கனலிற் குளிர்படுத் துக்கடற் கூடலின்வாய் வேந்தின் துயர்தவிர்த் தானையெப் போதும் விரும்புமினே. | | 71 | | 1253. | விரும்பும் புதல்வனை மெய்யரிந் தாக்கிய வின்னமிர்தம் அரும்பும் புனற்சடை யாய்உண் டருளென் றடிபணிந்த இரும்பின் சுடர்க்களிற் றான்சிறுத் தொண்டனை யேத்துதிரேல் கரும்பின் மலர்த்தமி ழாகரன் பாதம் தொடர்வெளிதே. | | 72 | | 1254. | எளிவந்த வா!வெழில் பூவரை ஞாண்,மணித் தார்தழங்கத் துளிவந்த கண்பிசைந் தேங்கலு மெங்க ளரன்துணையாங் கிளிவந்த சொல்லி,பொற் கிண்ணத்தின் ஞான வமிர்தளித்த அளிவந்த பூங்குஞ்சி யின்சொற் சிறுக்கன்ற னாரருளே. | | 73 |
1252. குறிப்புரை: ஏந்தும் உலகு - தாங்கும் உலகு; நிலவுலகம். போக மார்ப்பை - "போகமார்த்த பூண்முலை யாள்" என்னும் முதல் நினைப்பை யுடைய திருப்பதிகத்தை. குளிர்படுத்து வேகாது பச்சையாகப் பண்ணி. "மலிதேரான் கச்சியும் மாகடலும் தம்மின் - ஒலியும் பெருமையும் ஒக்கும்"1 என்றது போலக் கடல் நகரத்தையும் கூறுதல் கூடுமாகலின், "கடற் கூடல்" என்பதை, 'கடல்போலும் கூடல்' எனக் கொள்க. 1253. குறிப்புரை: இரும்பு - அங்குசம்; ஆகுபெயர். சுடர் - ஒளி. யானையை அடக்க உதவுகின்ற அங்குசத்தை அதன் காதிலேயே மாட்டி வைப்பது வழக்கம். "இரும்பின் சுடர்க் களிற்றான்" என்றது, தளபதியாய் இருந்து வெற்றி பெற்றதைக் குறித்த குறிப்புச் சொல். தொடர்வு - தொடர்தல்; அடைதல். 'பாதத் தொடர்பு' என்பதும் பாடம். "தொடர்வு எளிதே" என்றது, 'சிறுத்தொண்டர்பால் மிக்க நட்புக் கொண்டவர்' என்பது விளங்குதற்கு. "அரும்பும் புனற் சடையாய்" என்றது, 'சிவபெருமானாகவே தோன்றுகின்றவரே' என்றபடி. மலர் - தாமரை மலர் மாலை. 1254. குறிப்புரை: "எளி வந்தவா" என்பதை இறுதியிற் கூட்டி, 'எளியேனுக்கு எளிவந்தவாறு வியக்கத் தக்கது' என முடிக்க. "பூ" இரண்டில் முன்னது அழகு; பின்னது பொற் பூ. தார் - வடம். அழுங்க - ஒளி குன்றும்படி 'அரனுக்குத் துணையாம்' என நான்காவது விரிக்க. "கிளி வந்த" என்பதில் 'வந்த', உவம உருபு. "அளித்த" என்னும் பெயரெச்சம் "சிறுக்கன்றனார்" என்னும் கோடற் பொருட் பெயர்
1. தண்டியலங்கார உதாரணம்.
|