பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை866

1255.அருளுந் தமிழா கர!நின் னலங்கல்தந் தென்பெயரச்
சுருளுங் குழலியற் கீந்திலை யேமுன்பு தூங்குகரத்(து)
உருளும் களிற்றினொ(டு) ஒட்டரு வானை யருளியன்றே
மருளின் மொழிமட வாள்பெய ரென்கண் வருவிப்பதே.

74

1256.வருவார் உருவின் வழிவழி வைத்த வனமருந்தும்
திருவார் இருந்த செழுநகர்ச் செவ்வித் திருவடிக்காள்
தருவான் தமிழா கரகரம் போற்சலம் வீசக்கண்டு
வெருவா வணங்கொண்டல் கள்மிண்டி வானத்து மின்னியவே.

75

 

கொண்டது. அளி - வண்டு. "சிறுக்கன், சிறுக்கி' என்றாற் போலும் வழக்கு இருத்தலால், 'சிறு' என்பதன் முன் வலி மிகுதல் வழக்கு நெறியாகக் கொள்ளப்படும். கன்று - யானைக் கன்று. அன்னார் - போன்றவர்.

1255. குறிப்புரை: கைக்கிளைத் தலைவி பொருட்டாகத் தூது வந்து மாலை இரந்த தோழியை ஞானசம்பந்தர் இன்சொற் சொல்லி மறுக்க வேண்டி, அவளையே 'தலைவீ' என அழைத்ததாகவும், அதனைக் கேட்டுத் தோழி மறுமொழி கூறியதாகவும் இப்பாட்டு அமைந்துள்ளது.

'பணி செய்பவளாகிய என்னை, 'தொழீஇ' என அழைக்காமல், 'தலைவி' என அழைக்கின்றீர். அப்பெயர் என் தலைவிக்கு உரியது. அவளை நீர் ஏற்றுக் கொண்டால் பின்பு உரிமை பற்றி அவளை நீர் 'தொழீஇ' என்றே அழைக்கலாம். அப்பொழுது நான் செய்த உதவி பற்றி எனக்கு நீர் தரும் பாராட்டாக என்னை அவள்முன் 'தலைவீ' என்று கூட அழைக்கலாம். அவ்வாறு செய்யாமல் இப்பொழுது என்னை, 'தலைவீ' என்று அழைத்து வெறும் இன்சொற் சொல்லி மறுக்க நினைக்கின்றீரே; இது முறையோ; என்னும் கருத்தினை இப்பாட்டு உடையது.

சுருளுங் குழல் இயல், தலைவி. ஞான சம்பந்தர் யானைமேல் பவனி வரக் கண்ட பொழுது அதன் பின்னே ஓடியதாக வைத்து, "களிற்றினொடு ஓட்டருவாளை அருளியன்றே அவள் பெயரை என்கண் வருவிப்பது" என்றாள், அவள் பெயர், 'தலைவி' என்பது. ஓடுதலை 'ஓட்டருதல்' எனவும் கூறுவர். "ஒக்கவே ஓட்டந்தேன்"1 என அருளிமை காண்க. "ஓட்டருவானை" என்பது பாடமன்று, அலங்கல் - மாலை. 'முன்பு அருளியன்றே' என இயையும்.

1256. குறிப்புரை: இப்பாட்டு, ஒருவழித் தணந்த தலைமகன் வரவு நீட்டிப்பத் தலைவி கார் காலம் கண்டு ஆற்றாமை மிக்க வழித்தோழி, 'இஃது அவர் வரும் காலம்' எனத் தேற்றி ஆற்றுவித்தது.


1. திருமுறை - 5.49.4.