பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
104

மாணிக்கவாசகர் வரலாறு

அடித்தான். அடித்த அளவில் கூலியாளாக வந்த பெருமான் ஒருகூடை மண்ணை உடைப்பிற்கொட்டி மறைந்தான். பாண்டியன் அடித்த அப்பிரம்படி அரசன், அரசி, அமைச்சர், காவலாளர்கள் முதலிய எல்லோர் மேலும் பட்டது. அண்ட சராசரப் பொருள் அனைத்தின் மேலும் பட்டது. அப்போது வாதவூரர் இறைவன் தன் அடியவள் பொருட்டுக் கூலியாளாக வந்த திருவருளை எண்ணி வியந்தார். பாண்டிய மன்னன் வாதவூரர் பெருமையை நன்கறிந்து அவரை வணங்கி, ‘நற்றவப் பெரியீர்!  எனக்கு அமைச்சராய் அமர்ந்து எம் குலதெய்வத்தை என் கண்ணாரக்காட்டிக் குதிரைச் சேவகனாகவும், கூலியாளாகவும் வரச்செய்து என் பிறவி மாசை ஒழித்தீர்; என்னை மன்னித்தருள வேண்டும். தங்கள் பெருமையை இறைவன் எனக்கு நன்குணர்த்தினான். என் அரசுரிமையை இன்று முதல் தாங்கள் ஏற்றருளல் வேண்டும்’ என்று வேண்டினான். வாதவூரர் பாண்டியனிடம் ‘இறைவனுடைய திருவடித்தொண்டு செய்ய என்னை உரிமையாக்குவதே இவ்வுலக ஆட்சியை எனக்குத் தருவதற்கு ஒப்பாகும்’ என்றார். மன்னனும் அவர் விரும்பியவாறு அவரைச் செல்லவிடுத்துத் திருவருள் உணர்வோடு தன் அரண்மனைக்குச் சென்றான்.

அமைச்சர் பதவியைத் துறந்து தவ வேடம் தாங்கிய வாதவூரடிகள் இறைவன் திருவிளையாடல்களை எண்ணி மகிழ்ந்தவராய், திருப் பெருந்துறையை அடைந்தார்.

குருநாதர் பிரிவு:  

மீண்டும் தன் குருநாதரை அடைந்த வாதவூரடிகள் அடியவர் கூட்டத்தோடு கலந்து மகிழ்ந்திருந்தார். ஞானதேசிகனாய் வந்த பெருமான் தாம் கயிலைக்குச் செல்ல வேண்டியதைச் சீடர்களுக்கு உணர்த்தி அவர்களை இன்புற்றிருக்குமாறு பணிந்தார். அடியவர்கள் தம் குருநாதரைப் பிரிய மனம் இல்லாமல் பெரிதும் வருந்தினர். அதைக் கண்ட குருநாதர் இக் குருந்த மரத்தின் நிழலில் ஒரு தெய்வப் பீடம் அமைத்து அதில் நம்முடைய திருவடிகளை எழுப்பி வழிபாடு செய்து வருவீர்களானால் ஒருநாள் ‘இக்கோயில் திருக்குளத்தில் தீப்பிழம்பு ஒன்று தோன்றும்; அதில் அனைவரும் மூழ்கி எம்மை அடையலாம்’ என்று திருவாய் மலர்ந்து தம்மைப் பின்தொடர்ந்து வந்த அடியார்களை ‘நிற்க’ எனக் கட்டளையிட்டுக் கயிலை சென்றார். வாதவூரடிகள்  மட்டும் அவரைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். அவரைக்கண்ட குருநாதர், ‘நீ எம்மைப் பின் தொடர்ந்து வருதல் வேண்டா; உத்தர கோசமங்கை என்னும்