பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
106

மாணிக்கவாசகர் வரலாறு

அடைந்து புற்றிடங்கொண்ட பெருமானை வணங்கி, 23. திருப்புலம்பல் என்னும் பதிகத்தை அருளிச் செய்தார். அதன் பின்னர் சீகாழியை அடைந்து தோணியப்பரைத் தரிசித்து 24.பிடித்தபத்து என்னும் பதிகத்தை அருளிச்செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, சோழநாடு கடந்து நடுநாட்டை அடைந்து திருமுதுகுன்றம், திரு வெண்ணெய் நல்லூர், முதலிய தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருவண்ணாமலையை அடைந்தார். அங்கும் இறைவன் குருந்தமர் திருக்கோலம் காட்டியருளினன். அக்காட்சியைக் கண்டு வணங்கிய அடிகள் அத்தலத்தில் பலநாள்கள் தங்கியிருந்தார்.

திருவண்ணாமலையில்: 

அடிகள் அண்ணாமலையில் தங்கியிருந்தபோது மார்கழி மாதம் வந்தது. திருவாதிரைக்கு முன் வரும் பத்து நாள்களிலும் கன்னிப் பெண்கள் விடியற்காலம் எழுந்து வீடுகள்தோறும் சென்று ஒருவரையொருவர் துயிலெழுப்பிக் கொண்டு நீராடி வழிபாடு செய்வதைக் கண்டு அவர்கள் வாய்மொழியாகவே வைத்து 25. திருவெம்பாவையையும், அவ்வூர்ப் பெண்கள் அம்மானையாடும் காட்சியைக் கண்டு அவர்கள் பாடுவதாக வைத்து 26. திருவம்மானையையும் அருளினார்.

ிதம்பர தரிசனம்: 

பின்னர் அண்ணாமலையை நீங்கிக் காஞ்சிபுரம் அடைந்து அவ்வூர் இறைவனைத் தரிசித்துத் திருக்கழுகுன்றம் அடைந்து 27. திருக்கழுக்குன்றப் பதிகம் பாடினார். அங்கே பெருமான் பெருந்துறையில் அவரை ஆட்கொண்ட குருநாதர் திருக்கோலத்தோடு காட்சி வழங்கினான். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுத் திருத்தில்லையின் எல்லையை அடைந்து அத் திருத்தலத்தைத் தரிசித்தார். தில்லை சிவ லோகம் போலக் காட்சியளித்தது. அந்நகரையடைந்த மணிவாசகர் திருவீதிகளைக் கடந்து வடக்குத் திருவாயில் வழியே திருகோயிலுக்குள் சென்றார். சிவகங்கையில் நீராடி வலமாகச் சிற்சபையில் எழுந்தருளியிருக்கும் ஆனந்த நடராசப் பெருமானை ஆறா அன்பினில் கண்டு கண்ணீர்வார உளம் நெகிழ்ந்து வணங்கினார். குரு நாதனாக எழுந்தருளி வந்து காட்சி கொடுத்த இறைவனைத் தில்லைச் சிற்றம்பலத்திலே கண்டு தரிசித்து, பேரானந்தம் உற்று ஆனந்தக் கண்ணீர் பெருக 28. கண்ட பத்து என்னும் பதிகம் பாடி வழிபட்டார். பின்னர் தில்லையின் கீழ்த்தசையில் ஒரு தவச்சாலை அமைத்துப் பலநாள்கள் தங்கியிருந்து தினமும் அம்பலவாணனின்