ஆனந
மாணிக்கவாசகர் வரலாறு
ஆனந்த நடனத்தைத் தரிசித்துவந்தார்.
அங்கிருந்து திருப்புலீச்சுரம், திருநாகேச்சுரம், முதலான தலங்களுக்குச் சென்று தரிசித்து மீண்டும்
தில்லை வந்தடைந்தார். தில்லையில் அடிகள் அருளிச் செய்தவை 29. குலாப்பத்து, 30. கோயில்
திருப்பதிகம், 31. கோயில் மூத்த திருப்பதிகம், 32. கீர்த்தித் திருவகவல், 33. திருவண்டப்
பகுதி, 34. போற்றித் திருவகவல், 35. திருப்பொற்சுண்ணம், 36. திருத்தெள்ளேணம், 37. திருவுந்தியார்,
38. திருத்தோள் நோக்கம், 39. திருப்பூவல்லி, 40. திருப்பொன்னூசல், 41. அன்னைப் பத்து,
42. திருக்கோத்தும்பி, 43. குயில் பத்து, 44. திருத்தசாங்கம், 45. அச்சப்பத்து, என்பனவாம்.
புத்தரொடு சமய வாதம்:
மணிவாசகர் தில்லையில் வாழ்ந்துவரும்
நாள்களில் சிவனடியார் ஒருவர் சிதம்பரத்திலிருந்து ஈழ நாட்டிற்குச் சென்றிருந்தார். அவ்வடியார்
செம்பொன்னம்பலம், திருவம்பலம், திருச்சிற்றம்பலம் என்ற திருநாமங்களை இடைவிடாது
சொல்லிக் கொண்டிருக்கும் இயல்புடையவர்.
அவர் ஈழம் சென்றிருந்த
காலத்தில் ஈழநாட்டில் புத்த சமயம் மேலோங்கியிருந்தது. இவ்வடியாரின் இயல்பைக் கண்ட சிலர்
அரசனிடம் சென்று அவரது செய்கைகளை உணர்த்தினர். அரசன் அச்சிவனடியாரைச் சபைக்கு அழைத்து
வருமாறு செய்தான். அரசவைக்கு வந்த அடியவர் செம்பொன்னம்பலம், திருவம்பலம், என்று
சொல்லிக் கொண்டே தன் இருக்கையிலமர்ந்தார். அரசன் வியந்து இதன் பொருள் யாது? என்று
அவரைக் கேட்டான். அவ்வடியார் அதன் சிறப்புக்களை எடுத்துரைத்து ‘தீயவரும் உள்ளன்போடு இப்பெயரை
ஒருமுறை கூறினால் 21,600 தடவை திருவைந்தெழுத்தைக் கூறியதனால் உண்டாகும் பயனை இது தரும்’ என்று
கூறித் தில்லைப் பெருமானின் சிறப்பை எடுத்துரைத்தனர். அங்கிருந்த புத்தமத ஆசாரியன் சிவனடியார்
கூறுவதைக் கேட்டுச் சினந்து ‘திரிபிடகம் அருளிய எங்கள் புத்தனைத் தவிர வேறு தெய்வம் உண்டோ?
இன்றே நான் தில்லைக்குச் சென்று சைவசமயிகளை வாதிட்டு வென்று புத்தனே கடவுள் என்று நிலைநாட்டி
வருவேன்’ என்று சூளுரைத்து எழுந்தான். ஈழத்தரசனும் தன் ஊமைப் பெண்ணையும் உடன் அழைத்துக் கொண்டு
புத்தாசாரியனுடன் தில்லைக்குப் புறப்பட்டான். தில்லையையடைந்த புத்தகுரு, அரசன் முதலானோர் திருக்கோயிலை
யடைந்தனர். அக்கோயில் மண்டபம் ஒன்றில் அமர்ந்தனர். கோயில் காப்பாளர் அவர்களை அணுகி
புறச்சமயத்தார் இங்குத் தங்குதல் கூடாது என்று கூறினர். அதைக்கேட்ட
|