பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
108

புத

மாணிக்கவாசகர் வரலாறு

புத்த குரு ‘யாம் உங்கள் சமயத்தை வென்று எங்கள் சமயத்தை இங்கு நிலைநாட்ட வந்துள்ளோம்’ என்று வாதிற்கு அறைகூவினான். அச்சூளுரை தில்லைவாழ் அந்தணர்களுக்கு எட்டியது. அவர்கள் சோழ மன்னனுக்கு இந்நிகழ்ச்சியை உடன் தெரிவித்தனர். அன்றிரவு தில்லைவாழ் அந்தணர்கள் அனைவரும் புத்தமத குருவை எவ்வாறு வெல்வது என்ற கவலையுடன் தில்லைச்சிற்றம்பலவனை எண்ணி வணங்கித் துயில்கொண்டனர். நடராசப் பெருமான் அவர்கள் கனவில் எழுந்தருளி ‘தில்லையின் கீழ்பால் சிவயோகத்தில் அமர்ந்து தவமியற்றி வரும் நம் அடியவனாகிய வாதவூரனை அழைத்து வந்து இப்புத்த குருவோடு வாதிடச் செய்க, அவன் அவர்களை வெல்வான்;  கவலற்க’ என்று கூறி மறைந்தார். மறுநாள் தாம்கண்ட கனவை ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டு இறைவன் திருவருளை வியந்து மணிவாசகர் எழுந்தருளியுள்ள தவச்சாலையை அடைந்து மணிவாசகரிடம் “அடிகளே!  நம் சைவ சமயத்தை அழித்து புத்த மதத்தை நிலைநாட்டும் எண்ணத்துடன் ஈழநாட்டு மன்னனும், புத்த மதகுருவும் வந்துள்ளனர். தாங்கள் வந்து அவர்களை வாதில் வென்று நம் சமயத்தை நிலைநிறுத்தல் வேண்டும்” என்று அழைத்தார்கள். 

ஊமைப்பெண் பேசியது:  

வாதவூரடிகளும் தில்லை மூவாயிரவருடன் சென்று ஆனந்தக் கூத்தனை வணங்கி அவனருள் பெற்று, புத்தமதகுரு இருந்த மண்டபத்தை அடைந்தார். தீயவர்களைக் காண்பது தீதென்றெண்ணி அவர்களுக்கெதிரே ஒரு திரையிடச் செய்து தான் மறுபக்கத்தில் அமர்ந்தார். சோழ மன்னனும் மறையோரும், புலவர்களும் அவ்வவையில் கூடியிருந்தனர். சோழன் வாதவூரரைப் பணிந்து, ‘புத்தர்களை வாதில் வென்று நம் சமயத்தை நிலைபெறச் செய்வது தங்கள் கடமை, தோல்வியுற்ற புத்தர்களை முறைசெய்வது என் கடமை’ என்று வேண்டிக் கொண்டான். பின்னர் மணிவாசகர் புத்தகுருவை விளித்து ‘வந்த காரியம் என்ன?’ என்று வாதத்தைத் தொடங்கினார். வாதம் தொடர்ந்து நடைபெற்றது. மணிவாசகர் எத்தனை உண்மைகளை எடுத்துரைத்தாலும் அவை புத்தகுருவின் செவிகளில் ஏறவில்லை. மணிவாசகர் கூறிய வாதத்தை மறுக்கும் வழியின்றி, சிவநிந்தை செய்யத் தொடங்கினான். அதைக்கண்ட மணிவாசகர் கலைமகளை வேண்டி ‘சிவநிந்தை செய்யும் நாவில் நீ இருத்தல் பொருந்துமோ? இவர்கள் நாவைவிட்டு அகல்வாயாக; இது இறைவன் ஆணை’ என்று கூறினார். அவ்வளவில் புத்தகுருவும், அவருடன் வந்தவர்களும் ஊமைகளாயினர். இதைக்கண்டு