New Page 1
ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின்
ஆசியுரை
பொருள்களுமே பரமனது உடைமைகள்.
அவற்றை நாம் நமது உழைப்பிற்கேற்ப அவன் அநுமதிக்கும் அளவிற்கு அநுபவிக்கலாமே தவிர, நாமாகப்
பிறர்க்கு வழங்க நமக்கு உரிமை இல்லை. அவனுடைய பொருள் என்னும்போது அவனை நினைந்து ஈதலே முறையாகும்.
இதனைப் பட்டினத்தடிகள் ஒரு பாடலில்
குறிப்பிடுவது காண்க.
“பிறக்கும்பொழுது கொண்டுவந்ததில்லை
பிறந்து மண்மேல்,
இறக்கும்பொழுது கொண்டுபோவதில்லை.
இடைநடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்தது”
- பட்டினத்தடிகள், திருஏகம்பமாலை,
பா. 7
என்பதே அப்பாடல் பகுதி.
சொத்து இறைவனது எனில், அவனது
அநுமதி இன்றி அதன்மேல் நமக்கு என்ன உரிமை இருக்கிறது. எனவேதான் அறம் செய்தல், பொருள் ஈட்டல்,
இன்ப நுகர்வு, வீடுபேறு எல்லாமே அவனருளால் நாம் பெற்று நுகர்கிறோம். அப்பொருள்கட்கு நாம்
காவலராகவும், தர்மகர்த்தராகவும் இருக்கிறோமேயன்றி பொருள் அனைத்தும் நமதாகாது. இத்தர்மகர்த்தா
தத்துவத்தை நமக்கு முதலில் உபதேசித்த நூல் “ஈசாவாசியம்” என்னும் உபநிடதமாகும்.
இவ்வுபநிடதமே காந்தியடிகளை
மிகவும் கவர்ந்தது. அவர் அதனைத் தனது வாழ்வில் மேற்கொண்டார். அதனால்தான் அவர் மகாத்மா
காந்தி ஆனார். எனவே பரனை நினைந்து ஈதல், பரனை நினைந்து பொருளீட்டல், பரனை நினைந்து இன்பம்
நுகர்தல், பரனை நினைந்து இம்மூன்றையும் விடுதல் எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது என்பதை உணர்ந்து
கடைப்பிடித்து உயர்வோமாக.
உலகியல் சிற்றின்பம் நுகர உடல்வளர்ச்சியும்
பக்குவமும் வேண்டும். உலகியற்கு அப்பாற்பட்ட பேரின்பம் நுகர வேண்டுமானால் உயிர் வளர்ச்சியடைந்து
பக்குவப்படவேண்டும். உலகியல் இன்பம் சிறிது பொழுது இன்பம் பயத்தலின் இது சிற்றின்பம் எனப்பெறும்.
உடல் முதலிய கருவி கரணங்களைக் கொண்டு அநுபவிக்கப்பெறுவது. இறையியல் பேரின்பம் நுகர உயிர்
பற்றற்றுப் பக்குவப்பட்டாலே இறையருளில் திளைக்கும் பேரின்ப அநுபவம் கிட்டும். இப்பேரின்ப
நிலையை உலகியல் சிற்றின்ப வாயிலாக அருளியல் பேரின்ப அநுபவங்களை எல்லோரும் பெறுமாறு திருக்கோவையார்
என்னும் அருள்நூலால் தெளிய விளக்கி அருள்கிறார் மணிவாசகர்.
அகஒழுக்கமும் புறஒழுக்கமும்:
பழம்பெரும் நாகரிகப் பண்பாடு
வாய்ந்த நாடு நம் பாரத நாடு.
|