பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
331

14

இரவுக் குறி

14.12 குறைநேர்ந்தமைகூறல்

   
குறைநேர்ந்தமை கூறல் என்பது தலைமகளைக் குறை நயப்பித்துத் தலைமகனுழைச் சென்று, இற்றையாமத்தெல்லாம் நின்னருண்மேனிற்க வேண்டித் துன்பமுற்றேன்; நீ கருதியதூஉ முடிந்ததெனத் தோழி தலைமகனுக்கு அவள்குறை நேர்ந்தமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

159. ஏனற் பசுங்கதி ரென்றூழ்க்
        கழிய எழிலியுன்னிக்
    கானக் குறவர்கள் கம்பலை
        செய்யும்வம் பார்சிலம்பா
    யானிற்றை யாமத்து நின்னருள்
        மேல்நிற்க லுற்றுச்சென்றேன்
    தேனக்க கொன்றையன் தில்லை
        யுறார்செல்லுஞ் செல்லல்களே.

159

_______________________________________________________________

14.12.  குறைந யந்தனள் நெறிகுழ லியென
      எறிவே லண்ணற் கறிய வுரைத்தது.


   
இதன் பொருள்: ஏனற் பசுங்கதிர் என்றூழ்க்கு அழிய-தினையினது, பசியகதிர் கோடையாலழிய; எழிலி உன்னி-அஃதழியாமன் மழைபெறக் கருதி; கானக் குறவர்கள் கம்பலை செய்யும் வம்பு ஆர் சிலம்பா-கானத்துவாழுங் குறவர்கள் தெய்வத்திற்குப் பலி கொடுத்தாரவாரிக்கும் வம்பார்ந்த சிலம்பையுடையாய்; இற்றையாமத்து யான் நின் அருண்மேல் நிற்கல் உற்று-இற்றையிரவின்கண் யான் நின்னேவன்மேனிற்கவேண்டி; தேன்நக்க கொன்றையவன் தில்லை உறார் செல்லும் செல்லல்கள் சென்றேன்-தேனோடுமலர்ந்த  கொன்றையையுடையானது தில்லையைப் பொருந்தாதாரடையுந் துன்பத்தையடைந்தேன்; நீ கருதியதூஉ முடிந்தது எ-று.
       
   
வம்பு-காலமல்லாதகாலத்து மழை. யாமமு மென்பது பாடமாயிற் பகலேயன்றியிரவுமெனவுரைக்க. யாமமு நின்னருளே என்பதூஉம் பாடம். கானக்குறவர்கள் தமக்குணவாகிய தினைக்கதிர் கோடையாலழியத் தெய்வத்தைப் பராவி மழை பெய்விக்க முயல்கின்றாற்போல, நினக்குத் துப்பாகிய இவணலம், அலர் முதலாயினவற்றாற் றொலையும்வழி அது தொலையாமன் முயன்று