அதன்கண் உண்டாகிய
நஞ்சுபோல; மண்ணகம் உருக கனற்றும் அழல் மேனியை-நில உலகம் உருகும்படி சுடுகின்ற தியினையுடைய
நின்மேனியை; விண்ணுற விரித்த கருமுகில் எடுத்து படாங்கொடு மூடி-வானத்தின்கண் பொருந்தும்படி
நின்னால் விரிக்கப்பட்ட கரிய முகிலை எடுத்துப் போர்வையாகக் கொண்டு மறைத்து என்க.
(வி-ம்.)
நீலகண்டன் உயிர்கள் பொறுக்கவியலாத தனது பேரொளியை யானைத்தோலால் மூடி அவ்வுயிரினங்கள்
மறுக்கந் தீர்ந்து தன்னைக் கண்டு கண்குளிரச் செய்தான். அவ்வுயிரினங்களின் துன்பமும்
தீர்ந்தன. அதுபோல நீயும் உன்னுடைய அழல்மேனியை முகிற் போர்வையால் மறைத்து எம்மகட்கு
இன்பம் செய்தி என்பது கருத்தாகக் கொள்க. இனி இக்கருத்துக்கேற்ப மறிதிரைப் பரவை
புடைவயிறு குழப்பக் கலக்குவதாகிய ஒருநாளில் அதன்கட்டோன்றிய நஞ்சுபோல மண்ணகமுருகக்
கனற்றும் அழல்மேனியை என இயைத்தும் வருவித்தும் பொருள் கூறுக. இப்பகுதிக்குப் பழைய
உரையாசிரியர் மாற்றியும் வருவித்தும் கூறிய பொருள் பொருந்தாமையும் உணர்க. யாம்
கூறிய பொருட்குக் கலக்குவது என்பாலது ஈறுகெட்டு நின்றதெனக் கொள்க. தெய்வ ஒளியினை
உயிரினங்கள் கண்டுபொறா என்றே இறைவன் தன்மேனியைக் கரித்தோலால் போர்த்தனன்
என்னும் இது தற்குறிப்பேற்றம் என்க. மறைத்து என்றதனை மறைப்ப எனச் செயவென்னெச்சமாக்குக.
தரை; ஆகுபெயர்; உயிரினங்கள். மறுக்கம்-துன்பம். தடைந்தன-தடைப்பட்டன.
19-22:
எறிதிரை................................மலர்த்துதி
(இ-ள்)
எறிதிரை பழனத்து-வீசுகின்ற அலைகளையுடைய நீர் நிரம்பிய மருதப்பரப்பின்கண்; பனிச்சிறுமை
கொள்ளா-பனிப் பருவத்தாலுண்டாகும் துன்பத்தை எய்தாத ஏனைப் பருவத்தின்கண்; முள்ளரை
முளரி-முள்ளமைந்த அரையினையுடைய செந்தாமரை; வண்டொடு மலர்ந்த வண்ணம் போல-விடியற்காலத்தே
தன்னகத்து வைத்துப் பொதிந்த வண்டோடே இதழ்விரிந்து மலர்ந்த தன்மைபோல; மனமும்
கண்ணும் களிவர மலர்த்துதி-என் மகளுடைய நெஞ்சமும் கண்ணும் மகிழும்படி அவள் முகத்தை
மகிழ்ச்சியால் மலரச் செய்வாயாக இஃது அடியேன் நின்னை வேண்டும் வரங்காண் என்க.
(வி-ம்.)
எறிதிரைப்பழனம் என்றது மருதவைப்பினை. பனிச்சிறுமை-பனியாலுண்டாகும் துன்பம். பனிக்காலத்தே
தாமரைமலர் முகங் கருகுதல் இயல்பு. ஆதலால் அப்பருவத்தை விலக்குவார் பனிச்சிறுமை கொள்ளா
முளரி என்றார். கண்ணுக்கு வண்டு உவமை. தாமரை தன்னகத்திருந்த வண்டுகளை அகத்தே வைத்து
மாலைப்பொழுதில் குவிந்துகொள்ளும். ஆகலின் அது மறுநாட்காலையில் மலருங்கால் அங்குச்
சிறைப்பட்ட வண்டும் சிறகுவிரித்து முரன்று எழுதல் இயல்பாகலின் வண்டொடு மலர்ந்த
வண்ணம்போல என்றாள்.
|