இனி, நெஞ்சமே நீ தலைவியோடிருந்த என்னைப் பொருளாசையால் அலைதருங் கடுங்கானிற் றள்ளிப் பின்னர் அவள் உறுப்பின் ஆசையால் பொருளீட்டும் நெறியையும் தடுக்கின்றாய். நீ இங்ஙனம் செய்தல் அறிவுடைமையாகுமோ? ஒன்று நீ கருதுவது முலையின்பமெனில் உடனே மீள்வாயாக! பொருளின்பமெனில் உடனே செல்வாயாக. அதற்குத் தடை ஏதும் இல்லை. அவ்வழிச் செல்வாயாக! இவ்விரண்டனுள் ஒன்றை இப்பொழுது துணிந்து எனக்குக் கூறுவாயாக! என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடு-மருட்கை. பயன்-ஒன்று துணிதல்.
|