பக்கம் எண் :

274கல்லாடம்[செய்யுள்31]



பவள் என்பான் மதுரை எனும் பொற்கொடி என்றான். அளவமர் இன்பம்-ஆசையின் அளவிற்றாய் இருக்கும் இன்பம் என்க. இனி என் உயிராகிய பொன்னை அடைத்துவைத்த முலையாகிய செப்பு எனினுமாம்.

13-17: அன்றி...........................பெரிதே

     (இ-ள்) புறன் பயன் கொடுக்கும் பொருட்கோ-தலைவி தரும் இன்பம் போன்று உள்ளத்துணர்வால் உணரப்படுதலன்றிப் புறத்தார்க்கும் காணப்படும் அறமுதலிய பயனை அளிக்கும் இயல்புடைய பொருளைக் கருதியோ; ஆழிவளர்முலை இன்பு எனின்-வட்டமாக வளரும் தலைவியினது முலையால்வரும் இன்பமேயாயின்; மறித்து நோக்குமதி-உடனே மீண்டு செல்வாயாக அஃதின்றேல்; பெரும் பொருள் இன்பு எனில்-யாம் மேற்கொண்டு எழுந்த மிக்க பொருள்தரும் இன்பமேயாயின்; பிறிதுதடை இன்று-நீ அதனை ஈட்டுதற்குத் தடையேதும் இல்லை உடனே செல்வாயாக; ஓதல் வேண்டும் வாழிய பெரிது-ஆதலால் நீ கருதிய தொன்றனை எனக்கு இப்பொழுது கூறவேண்டும். நீ நன்கு வாழ்வாயாக! என்க.

     (வி-ம்.) புறப்பயன்-உள்ளத்து உணர்வானன்றிப் புறத்தார்க்கும் புலப்பட நுகரும் இன்பம். கருதியோ என்பதனைப் பொருட்கும் கூட்டுக. பொருட்கோ வாழி என்புழி வாழி என்பதனை அசையாக்கினுமாம். மதி: முன்னிலையசை. ஓதல் வேண்டும்-கூறுதல் வேண்டும். பெரிது-நன்மை குறித்து நின்றது. இதனோடு,

‘உண்ணா மையி னுயங்கிய மருங்கி
னாடாப் படிவத் தான்றோர் போல
வரைசெறி சிறுநெறி நிரைபுடன் செல்லுங்
கான யானை கவினழி குன்ற
மிறந்தபொரு டருதலு மற்றாய் சிறந்த
சில்லையங் கூந்த னல்லகம் பொருந்தி
யொழியின் வறுமை யஞ்சுதி யழிதக
வுடைமதி வாழிய நெஞ்சே நிலவென
நெய்கனி நெடுவே லெஃகி னிமைக்கு
மழைமருள் பஃறோன் மாவண் சோழர்
கழைமாய் காவிரிக் கடன்மண்டு பெருந்துறை
யிறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெருங்கட லோதம் போல
வொன்றிற் கொள்ளாய் சென்றுதரு பொருட்கே”         (அகம். 123)

எனவரும் பாவினையும் ஒப்பு நோக்குக.