பக்கம் எண் :

278கல்லாடம்[செய்யுள்32]



3-5: பெருநிலவு................................நுதலோன்

     (இ-ள்) பெருநிலவு கான்ற நீறுகெழு பரப்பின்-மிக நிலவொளியை வீசுகின்ற மணல் பொருந்திய நெய்தற் பரப்பின்கண்; அண்ட நாடவர்க்கு ஆர் உயிர்கொடுத்த-வானவர்களுக்குத் தம்மாற் பெறுதற்கரிய உயிரை வழங்கினமை காரணமாக; கண்டக் கறையோன்-மிடற்றின்கண் தோன்றும் கறுப்பினையுடையோனும்; கண்தரு நுதலோன்-கண்ணைத் தோற்றுவித்த நெற்றியையுடையோனுமாகிய சிவபெருமான்; என்க.

     (வி-ம்.) தேவர் முதலியோர் திருப்பாற்கடல் கடைந்தபொழுது கடைகயிறாகிய பாம்புகான்ற நஞ்சம் அத்தேவர்களை அழிக்கத்தொடங்கிய காலத்தே சிவபெருமான் அந்நஞ்சினை அள்ளிப் பருகியது காரணமாக மிடறு கறுத்தலின் பெருநிலவு கான்ற நீறுகெழு பரப்பின் அண்ட நாடவர்க்கு ஆருயிர் கொடுத்த கண்டக் கறையோன் என்றார். இந்நிகழ்ச்சி நிகழ்ந்த இடம் வருணன் மேய பெருமணலுலகம் ஆதலின் பெரு நிலவுகான்ற நீறுகெழு பரப்பு என்றார். கண்-தீக்கண். பெருநிலவு கான்ற நீறு என்றது நிலாப்போல ஒளிபரப்பும் மணற்பரப்பினை. அண்டநாடவர்-தேவர். அவரால் பாதுகாத்துக்கோடற்கரிய உயிர் என்பார், ஆருயிர் என்றார். கண்டம்-மிடறு. நுதல்-நெற்றி.

6-11: செழியன்.............................மகளிர்

     (இ-ள்) செழியன் நால்படை உடன்று அடைத்த சென்னி-பாண்டியனால் தன்னுடைய யானை, குதிரை, தேர், காலாள் என்னும் நால்வகைப் படையினையுங்கொண்டு போஎ செய்து முன் காவலிடப்பட்ட சோழன்; பாட-பாடாநிற்றலால்; முன்னொரு நாளில் தனது இகழ்தற்கரிய அருளுடைமையாலே செறிந்த இருளினையுடைய இடையாமத்தில்; அவனெனத் தோன்றி-அப்பாண்டியனே போலத்தோன்றி; அருஞ்சிறை விடுத்த முன்னவன்-தப்புதலரிய சிரையினை விட்ட எல்லாப் பொருட்கும் முன்னவனாகிய சிவபெருமானுடைய; கூடல் மூதூர் அன்ன-மதுரையாகிய பழைய நகரத்தினைப்போன்ற சிரப்பினையுடைய; வெள்நகை செவ்வாய் கருங்குழல் மகளிர்-வெள்ளிய பற்கலையும் சிவந்த வாயினையும் கரிய கூந்தலையுமுடைய மகளிரே! என்க.

     (வி-ம்.) நாற்படை-யானை முதலிய நால்வகைப்படை. இனி மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என இந்நான்கு பண்பினையும் உடைய படை எனினுமாம். இனி, கூலிப்படை, துணைப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை எனும் நால்வகைப்படை எனினுமாம். அடைத்த-அடைக்கப்பட்ட. அவன்: பாண்டியன். வெண்ணகைச் செவ்வாய்க் கருங்குழல் என்புழிச் செய்யுளின்பமுணர்க. மகளிர்: அண்மைவிளி.