1-2: தன்னுடல்...............................போல
(இ-ள்)
தன்னுடல் அன்றிப் பிறிது உண்கனை இருள்-தனது உடலை அன்றி உலகத்திலுள்ள வேறு எப்பொருளையும்
மறைக்குமியல்புடைய மிக்க இருளானது; பகல் வலிக்கு ஒதுங்கிய தோற்றம்போல-தன்னுடலைத்
தின்னும் ஞாயிற்றினுடைய ஆற்றலுக்கு அஞ்சி இக்காட்டினூடே வந்து ஒதுங்கித் திரியும்
ஒரு ஆட்சிபோலே என்க.
(வி-ம்.)
இருள் தன்னுடலைத் தின்பதன்றி உலகிலுள்ள வேறு பொருள் அத்தனையும் தின்னும் என்பதும்,
அது தன்னுடலைத் தின்னும் ஞாயிற்றின் வலிகு ஒடுங்கித் திரியும் என்பதும் நினைந்தின்புறுக.
உண்டற்குரிய வல்லாப்பொருளை உண்டனபோலக் கூறலு மரபே என்றமையால் பிறிதுண் கனையிருள்
என்றார். கனையிருள்-மிக்க இருள். பகல்-ஞாயிறு. இருள் யானைக்கு உவமை. இனி ஞாயிற்றின்
உடலைத் தின்பதன்றி அதற்கு வேறாகிய திங்களின் உடலை நாள்தோறும் சிறிது சிறிதாகத்
தின்று அழிக்கும் மிக்க இருள் எனினுமாம். தன் என்றது ஞாயிற்றை.
12-14:
செம்மணி......................ஒருத்தல்
(இ-ள்)
செம்மணி கிடந்த பசும்புனத்து-சிவந்த மாணிக்கங்கள் கிடந்த பசிய இத்தினைப்புனத்தின்கண்ணே;
வாய் உலறி-வாய்விட்டுப் பிளிறி; சொரிமழை மதம் தழை செவி புழக்கை குழிகண் பரூஉத்தாள்
கூர்கோடு ஒருத்தல்-மழை போலச் சொரியாநின்ற மதநீரினையும் தழைத்த காதுகளையும் துளையுடைய
கையினையும் குழிந்த கண்களையும் பரிய கால்களையும் கூரிய கொம்புகளையுமுடைய களிற்றியானை
யொன்று என்க.
(வி-ம்.)
வாய் உலறி என மாறுக. உலறுதல்-பிளிறுதல். தழைசெவி: வினைத்தொகை. புழை-துளை. குழிகண்:
வினைத்தொகை. ஒருத்தல்-களிற்றியானை. இருளின் தோற்றம் போன்ற தோற்றத்தையும்
மத முதலியவற்றையுமுடைய ஒருத்தல் என இயைக்க.
15-18:
சினை.................................புரிந்தே
(இ-ள்)
சினைதழை விளைத்த பழுமரம் என்ன-கிளைகளையும் தழைகளையும் உண்டாக்கிய பழுத்த மரங்களை
அடையுமாறுபோலே; அறுகால் கணமும் பறவையும்-வண்டுக் கூட்டங்களும் பறவைகளும்; கணையும்-யான்
எய்த அம்பும்; மேகமும் பிடியும் தொடர-முகில்களும் பிடி யானைகளும் தன்னைப் பின் தொடர்ந்து
வரவும்; ஏகியது உண்டே-ஈண்டு வந்ததுண்டோ; புரிந்து கூறுதிர்-விரும்பிக் கூறுமின் என்க,
|