பக்கம் எண் :

மூலமும் உரையும்3



  குண்டுநீ ருடுத்த நெடும்பா ரெண்ணமும்
எண்ணா விலக்கமொடு நண்ணிடு துயரமும்
25
  அளந்துகொடு முடித்த னின்கட னாதலின்
வரியுடல் சூழக் குடம்பைநூ றெற்றிப்
போக்குவழி படையார் துள்ளுயிர் விடுத்தலின்
அறிவுபுறம் போய வுலண்டது போலக்
கடற்றிரை சிறுக மலக்குதுயர் காட்டும்
30
  உடலெனும் வாயிற் சிறைநடுவு புக்குப்
போகா துணங்குறும் வெள்ளறி வேழமும்
ஆரணம் போன்றுநின் காலுற வணங்குதும்
கான்முக மேற்ற தொளைகொள்வாய்க் கறங்கும்
விசைத்தநடை போகுஞ் சகடக் காலும்
35
  நீட்டிவலி தள்ளிய நெடுங்கயிற் றூசலும்
அலமரு காலு மலகைத் தேரும்
குறைதரு பிறவியி னிறைதரு கலக்கமும்
எம்மனத் தெழுந்த புன்மொழித் தொகையும்
அருள்பொழி கடைக்கண் டாக்கித்
4..
  தெருளுற வைய முடிப்பையின் றெனவே.

(உரை)

1-4: திங்கள்.................முகத்த

     (இதன்பொருள்) திங்கள்முடி பொறுத்த-பிறைத்திங்களை தலைமிசைத் தாங்கிய, பொன்மலை அருவி-பொன்மலையினின்றும் வீழுகின்ற அருவியானது; கருமணி கொழுத்த தோற்றம் போல-நீலமணியைக் கொழிக்கின்ற காட்சியை யொப்ப; இருகவுள் கவிழ்த்த மத நதி உவட்டின்-தன் இரண்டு கவுள்களும் சிந்திய மத நீராகிய யாற்றினது பெருக்கின்கண், வண்டினம் புரளும்-வண்டுக் கூட்டங்கள் வீழ்ந்து புரளுதற்குக் காரணமாய்; வயங்கு புகர் முகத்த-விளங்குகின்ற புள்ளிகளை யுடைய யானை முகத்தையுடையோய் என்க.

     (விளக்கம்) திங்கள்-ஈண்டுப் பிறைத்திங்கள். பொன்மலை மூத்த பிள்ளையாருக்கும் மணி வண்டினத்திற்கும் உவமைகள். கவிழ்தல்-சிந்துதல். மதநதி-மத நீராகிய யாறு. உவடு-பெருக்கு. வயங்குபுகர்; வினைத்தொகை. புகர்-புள்ளி. முகத்த: விளி. இருகவுள்-இரண்டு கன்னம். வயங்கு-விளங்கும். பொன்மலை-இமயமலை. பொறுத்த-தாங்கிய.