பக்கம் எண் :

40கல்லாடம்[செய்யுள்3]



தலைப்பட்டுக் கொணர்ந்து, ‘பொருளதிகாரம் வல்லாரை எங்குந் தலைப்பட்டிலேம்’ என்று வந்தார். வர அரசனும் புடை படைக்கவன்று,” எனவரும் இறையனார் களவியலுரையானும் உணர்க. மாறன்-பாண்டியன். புலவர்-கடைச்சங்கப் புலவர்.

12 - 16: முந்நூறு........................................கடவுள்

     (இ-ள்) கடல் அமுது எடுத்து கரையில் வைத்தது போல்-திருப்பாற் கடலைக் கடைந்து அதன்கணமைந்த அமிழ்தத்தைத் திரட்டி எடுத்துத்தேவர்கள் எளிதில் உண்ணும்படி கரையிடத்தே வைத்தாற்போன்று; முந்துறும் பெருமறை முளைத்து அருள்வாக்கால்-எல்லா நூலுக்கும் முந்திய பெரிய வேதங்கள் தோன்றுதற்கிடனான அருள் நிரம்பிய மொழியினாலே: பரப்பு இன்சுவை தமிழ்-பரப்பும் இனிய சுவையுமுடைய தமிழாகிய கடலினின்றும்; ‘அன்பினைந்திணை’ என்று-அன்பினைந்திணை என்று தொடங்கி; அறுபது சூத்திரம் திரட்டி-அறுபது சூத்திரமாகிய அமிழ்தத்தைத் தொகுத்து; மற்று அவர்க்கு-அப்பாண்டிய மன்னனுக்கும் சங்கப் புலவர்களுக்கும்; தெளிதரக் கொடுத்த-பொருளியலை நன்கு தெளிந்து கொள்ளும்படி வழங்கியருளிய; தென் தமிழ்க் கடவுள்-தென் தமிழின் நூலாசிரியனாகிய இறைவனும் என்க.

     (வி-ம்.) கடல்-திருப்பாற் கடல். இது பரப்புடைய இனிய தமிழ் மொழிக்குவமை. அமிழ்தம் இறையனார் அகப்பொரு நூலுக் குவமை. எல்லா நூல்களுக்கும் முந்திய பெரிய வேதங்கள் என்க. தமிழ்க் கடவுள்-தமிழ் நூலாசிரியனாகிய இறைவன். இறைவன் அகப்பொருள் இலக்கணம் செய்தருளிய வரலாற்றினை, “மதுரை ஆலவாயில் அழல் நிறக்கடவுள் சிந்திபான்: என்னை பாவம்! அரசற்குக் கவற்சி பெரிதாயிற்று; அதுதானும் ஞானத்திடையதாகலான், யாம் அதனைத் தீர்கற் பாலம் என்று இவ்வறுபது சூத்திரத்தையுஞ் செய்து மூன்று செப்பிதழகத்து எழுதிப் பீடத்தின் கீழிட்டான்” (இறையனார் அகப்பொருள். களவு. சூத்திரம். 1. உரை) எனவரும் களவியலுரைப் பகுதியானுணர்க.

17 - 18: தழல்....................................கிளை

     (இ-ள்) தழல்கண் தரக்கின் சரும ஆடையன்-தீயை யொத்த கண்ணையுடைய புலியினது தோலாகிய ஆடையை யுடையவனும் ஆகிய சோமசுந்தரக் கடவுள் எழுந்தருளியுள்ள: கூடல் அம்பெரும்பதி கூறார் கிளைஎன்-நான்மாடக் கூடலாகிய பெரிய அழகிய மதுரை மாநகரத்தைப் புகழ்ந்து வாழ்த்தாத மடவோருடைய சுற்றத்தார் வருந்துதல் போன்று வருந்துவதற்கு என்க.

     (வி-ம்.) தழல்போன்ற கண்ணையுடைய தரக்கு என்க. தரக்கு-புலி. (சூ. நிகண். 3: 3). கூறார்-புகழ்ந்து வாழ்த்தாத மடவோர். கிளை வருந்துதல் போன்று வருந்துதற்கு என விரித்துக் கொள்க.