பக்கம் எண் :

மூலமும் உரையும்555



(உரை)
கைகோள்: கற்பு. தலைவி கூற்று

துறை: அணைந்தவழியூடல்.

     (இ-ம்) இதற்கு “அவனறிவு ஆற்ற அறியு மாகலின்” (தொல். கற்பி. 6) எனவரும் நூற்பாவின்கண் ‘புதுவோர் சாயற்கு அகன்ற கிழவனைப் புலம்பு நானிகட்டி இயன்ற நெஞ்சம் தலைப்பெயத் தருக்கி எதிர்பெய்து மறுத்த வீரத்து மருங்கினும்’ எனவரும் விதிகொள்க.

1-5: மதியம்.....................ஊர

     (இ-ள்) மதியம் உடல் குறைந்த வெள்ளாங் குருகு இனம்-திங்களினது உடலின் நிறத்தைக் குறைபடுத்திய நிறத்தையுடைய வெள்ளைக் கொக்கினங்கள்; பைங்காழ் தடவி செங்கயல் துரந்து உண்டு-தமது பசிய காலால் தடவிச்சிவந்த கயல்மீன்களைத் துரத்தியுண்டு; கழுக்கடை அன்ன தம் கூர்வாய் வழிப்புலவு-ஈட்டி நுனியையொத்த தமது கூரிய அலகிலுள்ள பழிக்கத்தகுந்த புலாலை; மதி எழில் விரித்த வெண்தளை இதழ் தாமரை மலர்மலர்-திங்களினது அழகைத் தன்னிடத்தே காட்டிய வெள்ளிய கட்டமைந்த இதழையுடைய தாமரையின் மலர்ந்த மலரிலே; துவட்டும் வயல்அணிஊர - துடைத்துக்கொள்வதற்கிடமான வயல்கள் அழகு செய்கின்ற ஊரையுடையோய் என்க.

     (வி-ம்.) வெள்ளாங் குருகின் நிறத்தை நோக்குழித் திங்களின் நிறம் குறைந்தவெண்மையாகத் தோன்றுதலின் மதியம் உடல் குறைந்த வெள்ளாங் குருகு என்றாள். மதியம்-திங்கள். வெள்ளாங் குருகு-வெள்ளைக்கொக்கு. பைங்கால் தடவி செங்கயல் துரந்துண்டு என்புழிச் செய்யுளின்பம் உணர்க. கழுக்கடை-ஈட்டியின் நுனி. புலவு-புலனாற்றம். மதிபோல ஒளிவிரித்த வெண்டாமரை என்க. மலர்மலர்: வினைத்தொகை. துவட்டல்-துடைத்தல்.

6-9: கோளகை....................அரக்கன்

     (இ-ள்) கோளகைக் குடிலில் குனிந்து இடைந்து-அண்டகோளகையாகிய குடிலின்கண் செல்லும்போது தலை குனிந்து சென்று விலகி; அப்புறத்து இடைநிலை அற்ற பெருவெளி அகத்து-அவ்வண்டகோளகைக்குப் புறத்தின்கன் அமைந்த தடையற்ற பெரிய பரந்த வெளியிடத்து; முடக்கு உடல் எடுத்த தொழில் பெறுவாழ்க்கை-முடங்கிய உடம்பொடு தோன்றிய இடையறாத தொழிலைப்பெற்ற வாழ்க்கையினையுடைய; கவைத்தலைப் பிறை எயிறு-பிளவான நுனியினையுடைய பிறைபோன்ற பற்களையும்; இருள் எழில் அரக்கன்-இருண்ட நிறத்தையுங் கொண்ட இராவணன் என்க.