திருக்கோவையார் செய்யுள்: 368
வாயிலவர் வாழ்த்தல்
அஃதாவது:
இல்லத்தார் செவ்வணி விடுக்க அதுகண்ட தலைவன் தலைவியின் பூப்பியல் செவ்வி கெடாமல்
அவள் மெலிவறிந்து வந்துற்றமை கண்ட வாயிலவர் அவன் பெருந்தன்மையைப் பாராட்டி வாழ்த்தியது
என்றவாறு. அதற்குச் செய்யுள்:-
வில்லைப் பொலிநுதல்
வேற்பொலி
கண்ணி மெலிவறிந்து
வல்லைப் பொலிவொடு வந்தமை
யானின்று வான்வழுத்துந்
தில்லைப் பொலிசிவன் சிற்றம்
பலஞ்சிந்தை செய்பவரின்
மல்லைப் பொலிவய லூரன்மெய்
யேதக்க வாய்மையனே.
. |
தலைமகனது தகவுடைமை நிலைதகுவாயில் நின்றோருரைத்தது
(இ-ள்)
வில்லைப் பொலி நுதல் வேல் பொலி கண்ணி மெலிவு அறிந்து-வில்லை ஒத்த புருவத்தையும்
வேல் போன்ற கண்களையுமுடைய நம் பெருமாட்டியின் வாட்டமறிந்து; வல்லைப் பொலிவொடு
வந்தமையான்-விரைந்து இவளது பொலிவு கெடுமுன்னரே வந்தமையால்; வான் நின்று வழுத்தும்-
வானவர் நின்று தொழாநின்ற; தில்லைப் பொலி சிவன் சிற்றம்பலம் சிந்தை செய்பவரின்
- தில்லையின்கண் பொலிவுற்றுத் திகழும் சிவபெருமானுடைய திருச்சிற்றம்பலத்தைப் இடையறாது
நினைகின்ற மெய்யடியார் போல; மல்லைப்பொலி வயல் ஊரன்-வளத்தாற் பொலியும் வயலையுடைய
ஊரையுடைய நம்பெருமான்; மெய்யே தக்க வாய்மையான்-மெய்யாகவே நல்ல வாய்மையுடையனே;
அவன் நீடு வாழ்க; என்க.
(வி-ம்.)
வில்லை என்புழி ஐகாரம் இசை நிறை. நுதல்; ஆகுபெயர். கண்ணி-கண்ணையுடையாள். வல்லை-விரைந்து.
பொலிவொடென்றது அவள் பொலிவு கெடுமுன்னரே என்றவாறு. வான்: ஆகுபெயர். மல்லல் என்பது
கடைகுறைந்து ஐகாரச் சாரியை பெற்று நின்றது. மல்லற் பொலி என்பதும்
பாடம். மெய்ப்பாடு-உவகை; பயன்-மகிழ்தல்.
|