முலை பொடித்தன வன்றே-கொலையை
வெளிப்படுத்தி எழா நின்ற முலை இன்னும் தோன்றவில்லை என்க.
(வி-ம்.) மறுபுலம்-பகையரசர்
இடம். ஒரு வேந்தன் தன் மாற்றரசர் பகையைக் காலம் பார்த்து நெஞ்சுள் அடக்கி வைத்தாற்போல
இவள் முலையும் தனது கொலைத் தொழிலைத் தன்னுள் அடக்கிக் கொண்டு மார்பின்கண் அடங்கி
இருப்பதன்றி முகிழ்த்துத் தோன்றவில்லை என்றவாறு. பொடித்தன அன்று: பன்மை ஒருமை
மயக்கம். பொடித்தன வென்றே என்றும் பாடம். வடுத்தெழுதலாவது வெளிப்படத்தோன்றுதல்.
31-32:
செம்மகள்...........................................தவிர்த்தி
(இ-ள்) செம்மகள்
மாலை இம்முறை என்றால்-செவ்விய எம்பெருமாட்டியின் தன்மை இத்தகையது எனின்; வழுத்தலும்
வருதலும் தவிர்தி-நீ இவள் பொருட்டால் என்னைப் போற்றிக் குறை இரத்தலும் இங்கு
வருதலும் தவிவாயாக என்க.
(வி-ம்.)
செம்மகள்-செவ்விய ஒழுக்கமுடையமகள். மாலை-தன்மை; அவள் தம்மை இங்ஙனமிருத்தலின்
நீ குறை இரத்தலும் ஈண்டு வருதலும் பயனில் செயலாம். ஆதலால் வாராதே கொள் என்று கூறிச்
சேட்படுத்தவாறு.
இனி, வேலோய்! எம்
பெருமாட்டியின் குதலையும் பொருள் தெரியாது பல்லினும் முறுவல் தோன்றாது கூழையும் முடியிற்கூடாது
விழியும் தொழில் கொள்ளாது முலையும் பொடித்தனவல்ல ஆதலின் அவள் இளையவள் விளைவிலள்
ஆதலின் நீ வழுத்தலும் வருதலும் தவிர்தி என முடிவு செய்க. மெய்ப்பாடு-பெருமிதம். பயன்-செவ்வி
பெறுதல்.
|