பக்கம் எண் :

58கல்லாடம்[செய்யுள்5]



“யானோக்குங் காலை நிலனோக்கும் நோக்காக்காற்
 றானோக்கி மெல்ல வரும்”
(குறள்-1094)

எனவும்,

“குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண்
 சிறக்கணித்தாள் போல நகும்”
(குறள்-1095)

எனவும் வரும் திருக்குறள்களானும் உணர்க.

25-26: தெய்வம்........................கூடாது

     (இ-ள்) தெய்வம் கொள்ளார் திணிமனம் என்ன-கடவுள் உண்டென்று நினையாத மடவோருடைய இருள் செறிந்த நெஞ்சம் ஒருவழிப்படாதது போல; விரிதரு கூழையும் திருமுடி கூடாது-பரந்த கூந்தலும் அழகிய முடியிடத்தே பொருந்த மாட்டாது என்க.

     (வி-ம்.) தெய்வம் உண்டு என்று கொள்ளார் என்க. இருள் திணிந்த மனம் என்க. இருள்-அறியாமை. திணிமனம்: வினைத்தொகை. விரிதரு கூழையும் அது. கூழை-கூந்தல். பேதைப் பருவத்து மகளிர்க்குக் கூந்தல் முடியின்கண் அடங்குமளவு வளராமையின் கூழையும் திருமுடி கூடாது என்றாள். மடங்காக் கூழையும் மருங்குதலும் பற்றிப் புதையிருந்தன்ன கிளரொளி வனப்பினர் (பெருங். 1. 34, 132-3) எனப் பிறரும் ஓதுதல் காண்க.

27-28: துணைமீன்............................................கொள்ளாது

     (இ-ள்) துணைமீன்-காதற்றுணையாகிய இரட்டை மீன்கள்; காட்சியின் விளைகரு என்ன-தம்முடைய பார்வையாலேயே விளைக்கின்ற சினையைப் போல; கூர்விழி-எம்பெருமாட்டியின் கூரிய கண்கள்; பார்வையின் தொழில்கள் கொள்ளாது-தமது நோக்கத்தாலேயே பிறர் உள்ளத்தே காமக்குறிப்பினைத் தோற்றுவித்தல் முதலிய தொழில்களைச் செய்யமாட்டா என்க.

     (வி-ம்.) துணைமீன்-ஆணும் பெண்ணுமாகிய இரட்டை மீன்கள். கண்கள் இரண்டாகலின் துணைமீன் என்றார். மீன்கள் தம் சினையைத் தம் விழ்களால் கூர்ந்து நோக்கும் அளவிலே அச்சினை குஞ்சுகளாய் விடும். அதுபோலத் தலைவியின் கண்கள் தம்பார்வையால் காதலன் நெஞ்சில் காமவியக்கத்தை தோற்றுவிக்க மாட்டா என்றவாறு.

29-30: மறுபுலத்து.......................................அன்றே

     (இ-ள்) வேந்து மறுபுலத்து அடுபகை அடக்கியது என-ஒரு வேந்தன் தன் பகைப்புலத்தார் விளைக்கும் பகையைக் காலம்பார்த்து உள் அடக்கினாற்போல; வடுத்து எழுகொலை