பக்கம் எண் :

636கல்லாடம்[செய்யுள்90]



10 - 13: பாசடை.................................ஊரனை

     (இ-ள்) பாசடை மறைத்து எழும் முளரி அம்கயத்துள்-பசிய தாமரை இலைகளை மறையும்படி மிகுதியாகப் பூத்தெழுந்த தாமரை மலர்களையுடைய பொய்கையில்; காரான் சேடு இனங்கள்-எருமைகள் அவற்றின் கடாக்களும்; எறிந்து உழக்கும்-வீழ்ந்து கலக்காநின்ற; கூடற்கு இறைவன்-மதுரைக்குத் தலைவனும்; காலற் காய்ந்தோன்-கூற்றுவனைச் சினந்துதைத்தவனுமாகிய கடவுளினது; திருநடம் குறித்த நம் பொருபுனல் ஊரனை-திருக்கூத்தினை நினையா நின்ற நம்முடைய அலைமோதும் நீர் நிரம்பிய ஊரினையுடைய தலைவனுக்கு என்க.

     (வி-ம்.) பாசடை-பச்சைஇலை. ஈண்டுத் தாமரை இலை என்க. முளரி-ஆகுபெயர். கயம்-பொய்கை. காரான்-எருமை. சேடு-கடா. காரானும் சேடும் என்க. காலன்-கூற்றுவங் ஊரனை என்புழி உருபுமயக்கம்.

14 - 18; எங்கையர்......................................நரி

     (இ-ள்) எமக்குத் தங்கையை-எமக்குத் தங்கை முறையாய் வந்த பரத்தையை; பாண்தொழில் புல்லன்-இசைபாடும் தொழிலையுடைய கீழ்மகனாகிய பாணன்; புணர்த்தினன் என்று-சேர்த்துவைத்தான் என்பது கருதி; எங்கையர் குழுமி-நந் தோழிமார் எல்லோரும் கூடி; இவனை-இப்பாணனை; கோலில் கரத்தில் தோலில் புடைப்ப-கோலினாலும் கைகளாலும் வாரினாலும் அடித்தமையாலே; கிளை முள் செறித்த வேலி அம்படப்பை-கிளைத்த முட்கள் நெருங்கிய மூங்கில்கள் அடர்ந்த வேலியையுடைய அழகிய தோட்டத்துன்கண்; படர்காய்க்கு அணைந்த-படர்ந்த கொடிகள் காய்த்த காய்களைக் கவர்தற்கு வண்ட; புன் கூழை குறுநரி-புல்லிய வாலையுடைய குள்ளநரி என்க.

     (வி-ம்.) எமக்குத் தங்கையை என்றது பரத்தையை. பாண் தொழில்-பண்பாடும் தொழில். புல்லன்-கீழ்மகன்; என்றது பாணனை. எங்கையர் என்றது தோழிமாரை. கோல்-தடி. தோல்-வார். கிளைமுள்: வினைத்தொகை. படப்பை-தோட்டம். படர்காய்-படர்ந்த கொடி காய்த்த காய் என்க. கூழை-வால். குறுநரி-குள்ளநரி. கூழையம் குறுநரி என்புழி, அம்: சாரியை.

19 - 22: உடையோர்....................நடந்தது

     (இ-ள்) உடையோர் திமிர்ப்ப-அத்தோட்டத்திற்குரியவர் புடைத்தபொழுது; வரும் உயிர்ப்பு ஒடுக்கி உயிர் பிரிவுற்றமை காட்டி-அந்த நரி வெளியே வருகின்ற மூச்சை அடக்கிக்கொண்டு கிடந்து உயிர் போனது போலக் காட்டி; அவர்