பக்கம் எண் :

திருவாசகம்
121


பதப்பொருள் : அத்தா போற்றி - அப்பனே வணக்கம், ஐயா போற்றி - குருவே வணக்கம், நித்தா போற்றி - என்று முள்ளவனே வணக்கம், நிமலா போற்றி - குற்றமற்றவனே வணக்கம், பத்தா போற்றி - தலைவனே வணக்கம், பவனே போற்றி - எவற்றுக்கும் பிறப்பிடமானவனே வணக்கம்.

விளக்கம் : அடிகள் இறைவனையே தமக்குத் தாயும் தந்தையும் குருவும் தலைவனுமாக நினைக்கும் கருத்தினால், "அத்தா போற்றி, ஐயா போற்றி, பத்தா போற்றி" என்று வணங்குகின்றார். "அப்பன் நீ அம்மை நீ" என்ற திருநாவுக்கரசர் வாக்கும் இங்கு நினைவுகூரத் தக்கது.

இறைவன், உலகத் தாய் தந்தையர் போல அழிபவனும் பாசமுடைய வனும் அல்லன் என்பதற்கு "நித்தா போற்றி நிமலா போற்றி" என்றார்.

பெரியாய் போற்றி பிரானே போற்றி
அரியாய் போற்றி அமலா போற்றி!

பதப்பொருள் : பெரியாய் போற்றி - பெரியவனே வணக்கம், பிரானே போற்றி - வள்ளலே வணக்கம், அரியாய் போற்றி - அரியானவே வணக்கம், அமலா போற்றி - பாசமில்லாதவனே வணக்கம்.

மறையோர் கோல நெறியே போற்றி

180. முறையோ தரியேன் முதல்வா போற்றி!

பதப்பொருள் : மறையோர் கோல நெறியே - அந்தணர் கோலத்தோடு வந்து அருள் புரிந்த நீதியானவனே, போற்றி - வணக்கம், முறையோ - ஓலம், தரியேன் - பொறுக்கமாட்டேன், முதல்வா - முதல்வனே, போற்றி - வணக்கம்.

விளக்கம் : ‘மறையோர் கோலமாய் வந்து என்னை ஆண்டுபின் இங்கே நிறுத்தி மற்ற அடியாரை உடன் கொண்டு சென்றது முறையோ? இதனை நான் ஆற்ற வல்லேன் அல்லேன்’ என்பார் "முறையோ தரியேன்" எனறார்.

உறவே போற்றி உயிரே போற்றி
சிறவே போற்றி சிவமே போற்றி!

பதப்பொருள் : உறவே போற்றி - சுற்றமானவனே வணக்கம், உயிரே போற்றி - உயிர்க்கு உயிராய் இருப்பவனே வணக்கம், சிறவே போற்றி - சிறந்த பொருளானவனே வணக்கம், சிவமே போற்றி - மங்கலப் பொருளானவனே வணக்கம்.

விளக்கம் : உயிர்களுக்கு உண்மை உறவு இறைவனே; அதற்குக் காரணம் அவன் உயிர்க்குயிராய் இருந்து உதவுதல்; இது, "உறவே போற்றி உயிரே போற்றி" என்பதில் உணரக் கிடக்கின்றது. சிறவு - சிறப்பு. இது எல்லாப் பேற்றினும் சிறந்த