சம்பந்தர் பாடல் பெற்ற தலம். இத்தலத்திற்கு ‘வில்வவனம்’ என்றும் பெயர். ‘திருவைகா’ என்றும் இத்தலம் அழைக்கப்படுகின்றது. ராஜகோபுரம் இல்லை. முகப்பில் விநாயகர் காட்சி தருகின்றார். முகப்பு வாயில் மட்டுமே ஐந்து கலசங்களுடன் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறது. உள்நுழைந்தால் ‘நந்தி’ நமைநோக்கித் திரும்பி (கிழக்கு நோக்கி) இருப்பதைக் காணலாம். இத்தல வரலாறாகிய வேடன் நிகழ்ச்சி தொடர்பாக - அதாவது வேடனைப் பிடிக்க எமன்வர, நந்தியும், துவாரபாலகர்களும், ஏனையோரும் தடுக்க, மீறி வருமவனைத் தடுத்து விரட்ட இவ்வாறு திரும்பி நோக்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் இக்கோயிலில் துவாரபாலகர்கள், நவக்கிரகங்கள் இல்லை எனப்படுகிறது. உள்கோபுரவாயில் நுழைந்தால் - வாயிலில் இடப்பால் வேடன் நிகழ்ச்சி சுதையால் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு மகிழலாம். வெளிப் பிராகாரத்தில் சப்தகன்னியர் சந்நிதியும், விநாயகர் சந்நிதியும், வள்ளி தெய்வயானையுடன் கூடிய ஆறுமுகப்பெருமான் சந்நிதியும் உள்ளன. இச் சந்நிதியில் மயிலின் முகம் திசை மாறியுள்ளது. கோஷ்ட மூர்த்தமாக உள்ள தட்சிணாமூர்த்தி அழகான திருவுருவம். அரிய வேலைப்பாடுடையது. இலிங்கோற்பவரும், அர்த்தநாரீஸ்வரரும், பிரம்மாவும் உள்ளனர். துர்க்கைக்கு எதிரில் இரு சண்டேஸ்வரர் திருமேனிகள் உள்ளன. திருமால், நாராயணி, பைரவர், சூரியன், சந்திரன், சனிபகவான் முதலிய மூலத் திருமேனிகள் பீடமிட்டு வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. மகா மண்டபத்தில் விநாயகர், பிரம்மா, விஷ்ணு, வீணா தட்சிணாமூர்த்தி மூலத் திருவுருவங்கள் உள்ளன. இத்தலத்தில் சிவராத்திரியன்று சிறப்பு விழா நடைபெறுகின்றது. சிவராத்திரியன்று நான்காம் யாமத்தில் வேடன், வேடுவச்சி, இறைவன் காட்சிதரும் ஐதீகம் புறப்பாடு நடைபெறுகின்றது. மூலவர் - சுயம்புமூர்த்தி - கிழக்கு நோக்கிய சந்நிதி. இடப்பால் அம்பாள் சந்நிதி தனியே உள்ளது. கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலம். மிகவும் பிரசித்திபெற்ற அம்பாள். “கோழைமிடறாக கவிகோளும் இலவாக இசைகூடும் வகையால் ஏழை அடியாரவர்கள் யாவை சொன சொல்மகிழும் ஈசன்இடமாம் தாழை இளநீர்முதிய காய் கமுகின்வீழ நிரைதாறு சிதறி வாழை உதிர்வீழ் கனிகள் ஊறி வயல் சேறுசெயும் வைகாவிலே.” (சம்பந்தர்) தலம் - 24 |