பக்கம் எண் :

211

     (பொ - ரை) நாயைவிடக் கேவலமான பாவியாகிய என்னை
நெருப்பு எரிகின்ற நரகவாசலும் நடுங்கத்தக்க சாத்தானின் கொடிய
கையினின்று இழுத்து, என்றுமழியாத மோட்ச இன்பத்தை யெனக்களித்த
கடவுளது கிருபையானது பெற்ற தாயின் அன்பைவிட நூறுமடங்கு பெரிது.
அன்பு மிகுந்த அந்த சர்வேசனுடைய பாதத்தையல்லாது வேறொன்றையும்,
மரணம் வருவதாக இருந்தாலும் என் வாய் மறந்துந் துதியாது, என் தலை
மறந்தும் வணங்காது.

 
 

           வேறு (ஒலிவமலை)

   
 

மன்ப தைக்கொரு மருந்துமாய் மருந்தென வருந்தும்
அன்ப ருக்கழி யாதபே ரின்பமு மாகி
என்பு ருக்கிடுங் கருணையா னேகநா யகனார்
முன்பி ரார்த்தனை செய்தபி னிகழ்ந்ததை மொழிவாம். 73

     (பொ - ரை) மானிடர்கட்கு ஒரு அமிர்தமாகியும்,
தேவாமிர்தத்தைப் போல் உண்ணும் அன்பர்கட்கு அழியாத பெரிய
மோட்ச இன்பமாகியும், எலும்பை உருக்கக்கூடிய கருணையையுடையவர்
ஈசன்முன் பிரார்த்தனை முதலாவது செய்தபின், நடந்தவைகளைச்
சொல்லுவோம்.

 
 

கத்து ருத்துவக் கடவுளின் கற்பனை கடந்து
சத்து ருத்துவ வாகிய தாரணி யோர்க்கு
மித்து ருத்துவம் பூண்டுள மேசியா தமது
மத்தி யத்தொழி லால்வருந் துயரெலா மதித்தே.      74

     (பொ - ரை) கர்த்தத்துவமுடைய கடவுளது கற்பனைகளை மீறி
அவருடைய சத்துருவுக்குச் சமமான உலகத்தவர்களுக்கு, சிநேகத்
தன்மையடைந்த மேசியாவாகிய ஸ்ரீ இயேசுபிரான் (கடவுளுக்கும்
மனிதர்கட்கும் இடையில் நின்று செய்யும்) மத்தியஸ்தத்தால் வரக்கூடிய
துன்பங்களையெல்லாம் நினைத்து,

 
 

புனித நீதியும் பரமகர ருணியமும் பூத்த
முனைவ னின்னருள் வேண்டுவரன் முழுதுண ரகத்தில்
நினைவு கொண்டொலி வாசலச் சாரலி னின்ற
புனைம லர்த்தடஞ் சோலையை நோக்கினர் போனார். 75

     (பொ - ரை) பரிசுத்த நீதியும் பரம அருளும் நிறைந்த ஈசனது
இனிய கருணையை நாடியவராய், (தான் படப்போகிற பாடுகள்)
எல்லாவற்றையும் அறிந்திருக்கிற மனதில் அவைகளை நினைத்து,
ஒலிவமலைச் சாரலிலிருந்த அழகிய புஷ்பம் நிறைந்த பெரிய
(கெத்ஸமனே) தோட்டத்தை நோக்கிச் சென்றார்.