இரண்டாம் பாகம்
(இ-ள்) யாவற்றிற்கு முதன்மையைக்
கொண்ட நாயகனான ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவின் றசூலாகிய நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களுக்குக் கிருபை பொருந்திய நாயகியா ரான கதீஜா றலி யல்லாகு
அன்ஹா அவர்கள் பெற்ற சிறுமியர்கள் நான்கு பேர்களில் அவர்கள் பெற்ற பேறுக ளியாவும் களங்கமற
ஒன்றாய்க் கூடி மின்னற் கொடியென்று சொல்லும் வண்ணம் வடிவத்தைப் பெற்றுப் பெருமையுற்றுப் பெண்களின்
சுடிகையைப் போன்று மகத்தாகிய இப்பூமியின் கண் அவதரித்த பாவை யானவர்கள்.
3044.
அதிர்த்திரைக் கடற்பா ரெங்கு
மமுதத்தீன் றிவலை சிந்தி
யுதித்தெழு முகம்ம தென்னுந்
திங்களி லுதயஞ் செய்து
பதித்தலத் துவக்கு மாதர்
பவக்கடற் றிமிர மோட்டுங்
கதிர்த்தடத் தீப மென்னக்
கட்டழ கெறிக்குஞ் சோதி.
4
(இ-ள்) அன்றியும், ஒலித்துச்
சத்தியாநிற்கும் சமுத்திரத்தைக் கொண்ட இப் பூமி முழுவதும் அமுதமாகிய தீனென்னு மழையைப்
பொழிந்து தோற்றமாகி எழுந்த நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகி வசல்லமென்று சொல்லும் சந்திரனில் நின்றும் வெளியாகி இப்பூமியினிடத்து விரும்பிய பெண்களின்
பாவச் சமுத்திரமாகிய அந்தகாரத்தை ஓட்டுகின்ற பெரிய பிரகாசத்தைக் கொண்ட தீபத்தைப்
போன்று பேரழகு பிரகாசிக்கின்ற சோதி யானவர்கள்.
3045.
ஆதிநா ளொளிவு வாய்ந்த
வழகெலாந் திரட்டிச் சேர்த்த
பாதியிற் பாதி நூற்றோர்
பங்கினிற் செம்பொன் னாட்டின்
மாதரை வகுத்திம் மாதைத் திரட்டிய
வண்ண மெல்லாந்
தூதுயிர்ப் புதல்வி யென்னப்
படைத்தனன் சுருதியோனே.
5
(இ-ள்) அன்றியும், வேதியனான
அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவானவன் ஆதிகாலத்தில் பிரகாசமானது சிறக்கப் பெற்ற அழகுக ளெல்லாவற்றையும்
ஒன்றாகக் கூட்டிப் பொருத்திய பாதியில் பாதியினது நூற்றிலொரு பாகத்தில் சிவந்த
பொன்னினாலான சொர்க்க லோகத்தினது பெண்களாகிய கூறுல் ஹீன்களைப் படைத்து ஒன்றாகக் கூட்டிய
மற்ற அழகை யெல்லாம் றசூலாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகி வசல்ல மவர்களின் பிராணனை யொத்த புத்திரி யென்று இந்தப் பாத்திமா றலி யல்லாகு அன்ஹா
அவர்களைச் சிருட்டித்தான்.
3046.
சுற்றிளம் பருதி வெய்யோன்
சுவட்டடிச் சேப்புக் கேயப்
பெற்றனன் மடந்தை துண்டத்
தழகினிற் பெற்றி லேனென்
றுற்றுள மொடுங்கக் கூனி யந்தரத்
துலவி நாணி
மற்றுள கலையுந் தேய்ந்து நாட்குநாண்
மறுகுந் திங்கள்.
6
|