பக்கம் எண் :

சீறாப்புராணம்

1213


இரண்டாம் பாகம்
 

அசீறாப் படலம்

 

கலிவிருத்தம்

 

3296. வானவர் பரவிய வள்ள னந்நபி

     தீனெனும் பெரும்பெய ரரசு செய்யுநா

     ளீனவன் குபிரவ ரியற்றுஞ் செய்கையைத்

     தானறிந் தொருவர்வந் தவையிற் சாற்றுவார்.

1

      (இ-ள்) தேவர்களான மலாயிக்கத்து மார்கள் வணங்கா நிற்கும் வள்ளலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி ஹபீபு றப்பில் ஆலமீன் செய்யிதுல் முறுசலீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தீனுல் இஸ்லா மென்று சொல்லும் பெரிய கீர்த்தியைக் கொண்ட அரசாட்சியைச் செய்யுகின்ற காலத்தில், இழிவைக் கொண்ட கொடுமையையுடைய காபிர்கள் செய்கின்ற செய்கையை ஓர் தூதுவர் தெரிந்து வந்து அவர்களின் சபையிற் சொல்லுவார்.

 

3297. வரைசெறி மக்கமா நகரின் மாற்றலர்

     திரகமு மணிகளுஞ் செம்பொ னாடையுந்

     தரளமு மிகுவிலைச் சரக்குந் தாங்கிய

     பரிகளு மெருதுமொட் டகத்தின் பந்தியும்.

2

      (இ-ள்) மலைக ளானவை நெருங்கப் பெற்ற திரு மக்கமா நகரத்திலுள்ள சத்துராதிக ளான காபிர்கள் திரக மாகிய ஓர் வகைப் பொன் நாணயங்களையும் இரத்தினங்களையும் சிவந்த பொன் நூலாற் செய்யப்பட்ட வத்திரங்களையும் முத்துக்களையும் அதிக விலையை யுடைய மற்றச் சரக்குகளையுஞ் சுமக்கப் பெற்ற குதிரைக் கூட்டங்களையும், எருதுக் கூட்டங்களையும், ஒட்டகக் கூட்டங்களையும்.

 

3298. காமரி னிரைநிரை காவ லாளரு

     மாமதி வலசில வணிக மாக்களும்

     பூமணஞ் செறிதரு பொழில்கள் சுற்றிய

     சாமினுக் கனுப்பினர் சமய மீதென்றார்.

3

      (இ-ள்) வரிசை வரிசையாக அழகை யுடைய அரசர்களையும் பெருமை பொருந்திய அறிவினால் வல்லமை யுற்ற சில வியாபாரிகளையும் புஷ்பங்களினது வாசனை யானது நெருங்கப் பெற்ற சோலைகள் சூழ்ந்த ஷா மென்னும் நகரத்திற்கு இது சமயம் அனுப்பினார்களென்று சொன்னார்.