பக்கம் எண் :

சீறாப்புராணம்

1214


இரண்டாம் பாகம்
 

3299. உற்றுள வறிந்தவவ் வொற்ற ரீதெனச்

     சொற்றவை செவிப்புகத் தூயன் றூதுவர்

     வெற்றிகொள் வேலினர் வியப்ப விம்மொழி

     பெற்றன மெனத்தனி மறையிற் பேசினார்.

4

      (இ-ள்) அங்குச் சென்று அவ் விடத்துள்ள உளவுகளைத் தெரிந்த அந்தத் தூதுவர் இவ்விதச் சமாச்சர மென்று சொல்லிய அந்த வார்த்தைகள் காதுகளிற் போய் நுழைய, பரிசுத்தனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் றசூலாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் விஜயத்தைக் கொண்ட வேலாயுதத்தை யுடையவர்களான அச்சபையின் கண்ணிருந்த அசுஹாபி மார்களாச் சரியப் படும்படி இந்த வார்த்தைகளை இன்று நாம் வரப் பெற்றோமென்று ஒப்பற்ற வேத வாக்கியத்தைப் போலுங் கூறினார்கள்.

 

3300. தலைவருக் கிம்மொழி சாற்றி வேதநூன்

     மலிதருங் கேள்விய பாசல் மாதமைப்

     பலவளங் கெழுமதி னாவிற் பண்புற

     நிலைதர முதன்மையி னிறுத்தி னாரரோ.

5

      (இ-ள்) தலைமைத் தனத்தை யுடைய அவ் வசுஹாபிமார்களுக்கு இவ் வார்த்தைகளைச் சொல்லி வேத சாஸ்திரங்களின் பெருகிய கேள்விகளை யுடைய அபாசல்மா றலி யல்லாகு அன்கு அவர்களைப் பல செல்வங்களும் பொருந்திய திரு மதீனமா நகரத்தின் கண் தகுதியுறும் வண்ணம் யாவருக்கும் முதன்மையைக் கொண்ட அரசராக நிலைக்கும்படி நிறுத்தினார்கள்.

 

3301. விரிகதிர் வேலினர் வளைந்த வில்லினர்

     சுரிகைபட் டயமழுச் சுமந்த தோளினர்

     பொருவினூற் றைம்பது புரவி தம்மொடும்

     வரநபி யெழுந்தன ரமரர் வாழ்த்தவே.

6

      (இ-ள்) அவ்வாறு நிறுத்தி நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் விரிந்த பிரகாசத்தைக் கொண்ட வேலாயுதத்தை யுடையவர்களும் வளைந்த கோதண்டத்தை யுடையவர்களும் கத்திகளையும் பட்டயங்களையும் மழுக்களையுந் தாங்கிய புயத்தையுடையவர்களுமான அசுஹாபிமார்கள் ஒப்பற்ற நூற் றைம்பது குதிரைகளோடும் தங்களுடன் வரத் தேவர்களான மலாயிக்கத்து மார்கள் துதிக்கும்படி எழும்பினார்கள்.