பக்கம் எண் :

சீறாப்புராணம்

1365


இரண்டாம் பாகம்
 

அசனார் பிறந்த படலம்

 

கலிநிலைத் துறை

 

3729. மருந்தெ னுங்கலி மாவுரை விதைத்துமக் காவி

     லிருந்து மாமதீ னாவிடத் தினிதெழுந் தருளித்

     திருந்த வாண்டொரு மூன்றினில் தீன்பயிர் விளைத்துப்

     பொருந்து நாளினி னுற்றவை யினிற்சில புகல்வாம்.

1

     (இ-ள்) நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தேவாமிர்தமென்று கூறும் லாயிலாஹ இல்லல்லாகு முஹம்மதுர் றசூலுல்லாஹி யென்னுங் கலிமா வசனத்தை எவ்விடத்தும் விதைத்துத் திரு மக்கமா நகரத்திலிருந்து பெருமை பொருந்திய திருமதீனமா நகரத்தின் தானத்திலிருந்து இனிமையோடு மெழுந்தருளிச் செவ்வையாக ஒப்பற்ற மூன்றாவது வருடத்தில், தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கப் பயிரையுண்டாக்கிப் பயிரையுண்டாக்கித் தங்கிய அந்தக் காலத்தில், அங்கு தோன்றியவற்றில் சிலவற்றை யாங் கூறுவாம்.

 

3730. ஒலிகொண் மாக்கடன் மணியெனு நபியுயிர்க் குயிராய்

     வலியும் வீரமும் வெற்றியுந் திரண்டொரு வடிவாய்

     நிலனு தித்துய ரும்பரின் வரிசையி னிறைந்த

     குலவு நீள்புக ழுமறுகத் தாபெனுங் குரிசில்.

2

      (இ-ள்) முழக்கத்தைக் கொண்ட பெரிய  சமுத்திரத்திலுள்ள முத்தமென்று சொல்லும் நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி  வசல்ல மவர்களது பிராணனுக்குப் பிராணனாகி விலிமையும் வீரமும் விஜயமும் ஒன்றுசேர்ந்து ஒப்பற்ற வடிவமாகி இப்பூலோகத்தின் கண் அவதரித்து உயர்ந்த தேவலோகத்திலும் சங்கையினாற் பூரணப்பட்ட பிரகாசியா நிற்கும் நீண்ட கீர்த்தியை யுடைய உமறு கத்தாபு றலி யல்லாகு அன்கு என்று கூறும் பெருமையிற் சிறந்தோர்கள்.

 

3731. அருந்த வத்தினி லீன்றெடுத் துவந்தபெண் ணரசைக்

     கருந்த டங்கயற் கண்ணியை நறுமொழிக் கனியை

     வருந்து மெல்லிழைக் கொடியைமென் பிடிநடை மயிலைப்

     பொருந்து மாரமு தையபு சாவெனும் பூவை.

3