பக்கம் எண் :

சீறாப்புராணம்

1371


இரண்டாம் பாகம்
 

3746. முசுலி மானவர் செயுந்தொழிற் சடங்குகண் முடித்துத்

     திசையெ லாம்புகழ்ந் துரைதரப் பேசிய செம்மல்

     வசைய றுங்கரத் தெடுத்தரும் பேரனை வாழ்த்தி

     யசனெ னச்செழுந் திருப்பெயர் தரித்தன ரன்றே.

18

     (இ-ள்) அன்றியும், எண்டிசைகளிலுமுள்ள எல்லாருந் துதித்துக் கூறும் வண்ணங் கூறிய அரசரான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் முஸ்லிமானவர்க ளியற்றுகின்ற தொழில்களாகிய சடங்குகளை நிறைவேற்றி அருமையான தங்கள் பேரனைக் குற்றமற்ற தங்கள் கைகளினாலெடுத்து ஆசீர்வதித்து ஹசனென்று செழிய தெய்வீகந்தங்கிய நாமத்தைச் சூட்டினார்கள்.

 

3747. உருவு மந்தமு நிறமுநந் நபியென வொளிரு

     மருக கச்செழுங் குழவியுஞ் சிபுரியீ லணுகி

     யிருடொ றுமணித் தொட்டிலை யசைத்தரு கிருந்து

     வரிசை செய்திட நாயகன் வளர்த்திட வளர்ந்த.

19

     (இ-ள் ,) அவ்வாறுசூட்ட, வடிவமும், அழகும், நிறமும் அந்த நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல்சல்லலாகு அலைகிவசல்லமவர்களைப் போன்று பிரகாசியா நிற்கும், அருமையான புதல்வியாகிய காத்தூனேஜன்னத் பீவிபாத்திமா றலியல்லாகு அன்ஹா அவர்களது செழிய அந்த ஹசனென்னுங் குழந்தையும், இருட்காலத்தி லெல்லாம் ஜிபுரீலலைகிஸ்ஸலா மவர்களடுத்து அருகிலுட்கார்ந்து அழகிய தொட்டிலையாட்டி சங்கைகள் செய்யவும், நாயகனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவானவன் வளர்க்கவும் வளர்ந்தது.

 

3748.  இந்த மானில  மடந்தைய ரெவருமீ டேற

     வந்த நாயகி பாத்திமா தருதிரு மகவைச்

     சிந்தை கூர்தரு முவப்பொடுந் தினந்தினம் போற்றி

     யந்த நாயகன் றூதுவ ரிருக்குமந் நாளில்.

20

      (இ-ள்) அவ்வாறு வளர, அந்த நாயகனாகிய அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் றசூலாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் இந்தப் பெருமை பொருந்திய உலகத்திலுள்ள மாதர்களனைவரும் கடைத்தேறும் வண்ணம் இப்பூமியில் அவதரித்த நாயகியான காத்தூனேஜன்னத் பீவிபாத்திமா றலியல்லாகு அன்ஹா அவர்கள் தந்த தெய்வீகந் தங்கிய அந்த ஹசனென்னும் புதல்வரை மனமானது மகிழ்ச்சியடையும்படி பிரியத்துடன் பிரதிதினமும் துதித்து இருக்கின்ற அந்தக் காலத்தில்.