|
இரண்டாம் பாகம்
(இ-ள்) அன்றியும்,
சிறப்பினைப் பொருந்திய ஒப்பற்ற சிங்கத்தை நிகர்த்த வீரர்களும் மருட்சியுற்ற வலிமையைப்
பொருந்திய தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தையுடைய அரசர்களும் பேராசையான ததிகரித்து
அருமையான பொருள்கள் பொருந்திய அளவற்ற நமது பாசறையின் பண்டங்களை விரும்பினார்கள்.
3976.
சீல மேவிலாச் சிறிது பேரொடு
மால மன்னவ னாங்கு நின்றனன்
சால நந்தமா தானை யாகிய
வேலை யைக்கொடு மீள வேண்டுமால்.
217
(இ-ள்) நல்லறிவைப்
பொருந்தாத கொஞ்சப் பேர்களுடன் விஷத்தை நிகர்த்தவனான அவ்வீரன் அந்தத் தானத்தில் நிற்கின்றான்.
நாம் மிகவும் பெருமை பொருந்திய நமது சேனையாகிய சமுத்திரத்தைக் கொண்டு திரும்ப வேண்டும்.
3977.
கண்டு போவது கவ்வை யன்றினி
மண்டு தானையை வதைத்து வென்றியைக்
கொண்டு போதலே குறிப்பெ னாவிவண்
விண்டு ரைத்தனை மெய்மையே யென்றான்.
218
(இ-ள்) நாம் பார்த்து
விட்டுச் செல்லுவது காரியமல்ல, இனி நெருங்கிய அந்தச் சத்துராதிகளது சைனியத்தைக் கொன்று விஜயத்தைக்
கொண்டு செல்லுவதே கருத்தென்று சொல்ல, அதற்கு அந்த அபாசுபியா னென்பவன் நீ இங்கு உனது வாயைத்
திறந்து சத்தியத்தையே சொன்னாயென்று சொன்னான்.
3978.
சொல்லி வாகினி தூண்டி காலிது
வில்லு றுங்கர வீரர்தம் மொடு
மல்லல் வந்துற வப்துல் லாவையும்
வல்லை வந்துவ ளைந்து கொண்டனன்.
219
(இ-ள்) காலிதென்பவன்
அவ்வாறு கூறிக் கோதண்டத்தைப் பொருந்திய கைகளையுடைய வீரர்களோடும் தனது வாகினியை நடத்திக்
கொண்டு துன்பமானது வந்து சேரும் வண்ணம் அந்த அப்துல்லா றலியல்லாகு அன்கு அவர்களையும் விரைவில்
வந்து சூழ்ந்து கொண்டான்.
கலிநிலைத்துறை
3979.
அல்லி னாலுரு வெடுத்தன போன்றெழு மபசிப்
பல்லர் சூழ்தர காலிது போரினிற் படுப்ப
மல்லி னூறுதோ ளசைதர நகைத்துடல் வளைந்த
வில்லி னாலினித் தொலைப்பனென் றப்துல்லா வெகுண்டார்.
220
|