பக்கம் எண் :

சீறாப்புராணம்

1450


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு போராட, வேலாயுதங்கள் வெவ்விய வலிமையைக் கொண்ட கைகளைக் கீறிக் கோபித்துக் கொண்டு விரைந்து சென்றன. அம்புகள் சந்தனக் குழம்புகள் பரவிய மார்புகளில் நுழைந்தன. சக்கரங்கள் பூமியிற் சிந்தும் வண்ணம் வீரர்களது தலைகளை யுருளச் செய்தன. கவண்கல் மேகத்திற் பொருந்திய இடியைப் போலும் விழுந்தன.

 

3993. இன்ன தன்மையின் வடுப்பட தீனவ ரிதனாற்

     பின்னை யேதுமங் குணர்ந்திலர் சினங்கணாற் பெய்து

     மின்னி லங்குவே லடலமு சாவெனும் வீரர்

     சின்ன மாக்குவ னென்றுகைக் கொண்டனர் சிலையை.

234

     (இ-ள்) இத்தன்மையாகத் தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம்மார்க்கத்தை யுடைய அவர்கள் காயப்பட, இதனால் அவ்விடத்திற் பின்னர் யாதுந் தெரியாதவர்களாகக் கோபத்தைக் கண்களினாற் பொழிந்து பிரபையானது ஒளிரா நிற்கும் வேலாயுதத்தைத் தாங்கிய வலிமையை யுடைய ஹம்சாறலி யல்லாகு அன்கு என்று சொல்லும் வீரரானவர்கள் சத்துராதிகளான காபிர்களைத் துண்டப்படுத்துவேனென்று சொல்லிக் கோதண்டத்தைக் கரத்தி லெடுத்தார்கள்.

 

3994. எடுத்த விற்குணஞ் செவியுற வாங்கிமுன் னிகலி

     யடுத்த சேனைமேல் விடுத்தனர் பலசர மவைபோய்த்

     தொடுத்த வில்லையுஞ் சரத்தையும் வேலையுந் துணித்துக்

     கடுத்த வேந்தர்தம் முடியொடு முடியையுங் களைந்த.

235

     (இ-ள்) அவ்வாறு எடுத்த வில்லினது குணமானது காதுகளிற் பொருந்தும் வண்ணம் அதை வளைத்துத் தங்கள் முன்னர் விரோதித்து வந்து நெருங்கிய சேனையாகிய காபிர்கள் மீது பல அம்புகளை விட்டார்கள். அவ்விதம் விட்ட அந்த அம்புகள் சென்று அந்தக் காபிர்கள் பிடித்திருந்த விற்களையும் அம்புகளையும் வேற்களையுங் கண்டப்படுத்திக் கோபித்த அந்த அரசர்களது தலையோடு கிரீடங்களையும் களையச் செய்தன.

 

3995. மாரு தத்தினை யொத்தெழும் பரியொடும் வலிய

     வீரர் தம்மையும் வீழ்த்தியு மூன்சுவை வேண்டி

     யாரம் வீற்றிருந் திலகிய மணிமுடி யரசர்

     பாரத் தோட்பருப் பதத்தினும் புகுந்தன பகழி.

236

     (இ-ள்) அன்றியும், அந்த அம்புகள் காற்றை நிகர்த்து எழும்பா நிற்குங் குதிரைகளோடும் வலிமையை யுடைய வீரர்களையும் பூமியில் விழச் செய்தும், மாமிசத்தின் மதுரத்தை விரும்பி