பக்கம் எண் :

சீறாப்புராணம்

1449


இரண்டாம் பாகம்
 

3989. காலி தோர்புறத் தினினின்று பொருவதுங் கலைந்து

     வேலை போவபோல் தீனவர் பறிந்தது மேன்மேற்

     கோல மாநபி வீந்தன ரென்றதுங் குறித்துத்

     தாலங் கீழுறக் காபிர்கள் மீண்டுவந் தனரால்.

230

     (இ-ள்) அவ்வாறு நிற்க, தோல்வியடைந்து சென்ற காபிர்கள் காலிதென்பவன் ஒரு பக்கத்தில் நின்று யுத்தஞ் செய்வதையும், தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தை யுடையவர்கள் சமுத்திரமானது செல்லுவதைப் போலு மென்மேலுங் குலைந்து கடந்து விரைந்து சென்றதையும், அழகு பொருந்திய பெருமையையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்லமவர்க ளிறந்தார்களென்றதையும் மனதின்கண் மதிப்பிட்டு இப்பூமியானது கீழாகும்வண்ணந் திரும்பி வந்தார்கள்.

 

3990. பொன்றி யூன்பொழி களத்திடை வருகின்ற போழ்தில்

     வென்றி வெண்குடை கவரிபே ரிகைபல வீழ்ந்த

     தொன்றி லாதெடுத் திருபடைத் தலைவரு முயர்ந்த

     நன்றி செய்நபி தமைவந்து வளைந்தனர் நலிய.

231

     (இ-ள்) மாண்டு நிணத்தைச் சிந்துகின்ற அந்த யுத்தக்களத்தின் கண் அவர்கள் அவ்வாறு வருகின்ற சமயத்தில், வெற்றியைக் கொண்ட வெண்ணிறத்தையுடைய பல கவிகைகளும் சாமரங்களும், பேரிகைகளும் வீழ்ந்தவற்றை ஒன்றில்லாமலெடுத்து இருபடைத் தலைவர்களும் மெலியும் வண்ணம் வந்து மேலான நன்றியைச் செய்கின்ற நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைச் சூழ்ந்தார்கள்.

 

3991. பட்ட யத்தினும் வாளினும் வில்லினும் பரந்த

     நெட்டி லைத்தலைச் சூலத்தி னுந்தசை நிறைந்த

     வட்ட நேமியி னுங்கவண் கல்லினும் வாய்ந்த

     கட்டு பத்திரத் துனுங்கொண்டு நீட்டினர் கடிதின்.

232

     (இ-ள்) அவ்வாறு சூழ்ந்து பட்டயத்தினாலும், வாளினாலும், வில்லினாலும், பரவிய நீண்ட தகட்டு வடிவமான நுனியையுடைய சூலத்தினாலும், மாமிசம் நிறைந்த வட்ட வடிவையுடைய சக்கரத்தினாலும், கவண்கல்லினாலும், கட்டிய சிறந்த அம்புகளினாலும் வேகத்திற் கொண்டு நீட்டிப் போராடினார்கள்.

 

3992. வெந்தி றற்கரங் கிழித்தழன் றோடின வேல்கள்

     சந்த னம்பட ருரங்களிற் புகுந்தன சரங்கள்

     சிந்த மைந்தர்தஞ் சென்னியை யுருட்டின திகிரி

     கந்த ரத்துறு மிடியென வீழ்ந்தன கவண்கல்.

233